’ரூ.12 கோடி, மும்பை ப்ளாட், BMW கார்..’ - ஜீவனாம்சம் கேட்ட பெண்ணுக்கு உச்ச நீதிமன்றம் சொன்ன பதில்!
விவாகரத்து வழக்கு ஒன்றில், கணவரிடமிருந்து ஜீவனாம்சமாக மும்பையில் ஒரு வீடு, ரூ.12 கோடி தொகை, பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவற்றைக் கேட்டு பெண் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அந்தப் பெண்ணிடம், “நீங்கள் மிகவும் படித்தவர். நீங்கள் தகவல் தொழில்நுட்பத் திறன் பெற்றவர். எம்பிஏ முடித்திருக்கிறீர்கள். படித்து திறமையான நபராக இருக்கிறீர்களே, உங்களைப் போன்றவர்களுக்கு பெங்களூரு, ஹைதராபாத்தில் நல்ல வேலை வாய்ப்பு இருக்கும். நீங்கள் ஏன் வேலைக்குச் செல்லக் கூடாது?
வெறும் 18 மாதங்கள்தான் கணவருடன் வாழ்ந்திருக்கிறீர்கள். ஆனால், இப்போது உங்களுக்கு பிஎம்டபிள்யு கார் வேண்டும் அல்லவா? உங்களுக்காக நீங்கள்தான் சம்பாதிக்க வேண்டும், அதை மற்றவர்களிடம் கேட்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
அதற்கு தன்னுடைய கோரிக்கைகளை நியாயப்படுத்திப் பேசிய அந்தப் பெண், தன்னுடைய கணவர் மிகப்பெரிய பணக்காரர் என்றும், அவர் இந்தத் திருமணத்தைச் செல்லாததாக்க முயல்கிறார், இதனால், தான் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது கணவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாதவி திவான், ”அந்தப் பெண் ஏற்கெனவே இரண்டு பார்க்கிங் இடங்கள் கொண்ட மும்பை ஃப்ளாட்டில் வசித்து வருவதாகவும், அதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதியில், உச்ச நீதிமன்றம் அந்தப் பெண்ணுக்கு சுமை இல்லாத பிளாட் அல்லது ரூ.4 கோடியை ஏற்றுக்கொள்வது மற்றும் புனே, ஹைதராபாத் அல்லது பெங்களூரு போன்ற ஐடி மையங்களில் வேலை தேடுவது ஆகிய விருப்பங்களைத் தேர்வுசெய்ய வலியுறுத்தியுள்ளது. மேலும், இரு தரப்பினும் ஒருவருக்கொருவர் எதிராக எந்த குற்றவியல் நடவடிக்கைகளையும் தொடங்கக்கூடாது எனவும், இரு தரப்பினரும் முழுமையான நிதி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் வேண்டும் எனவும், கணவரின் தந்தையின் சொத்தில் பெண் உரிமை கோர முடியாது என்றும் தெரிவித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளது.