வாரிசு அரசியலுக்காக மாநில உரிமையை விற்பனை செய்து விட்டார் ஸ்டாலின் - ஆர்பி.உதயகுமார்
செய்தியாளர்: மணிகண்டபிரபு.
திமுக பொதுக்குழுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் மதுரை வருகை:
மதுரையில் நாளை காலை திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின் இன்று மாலை மதுரைக்குச் செல்ல உள்ளார். அங்கு செல்லும் அவர், ரோடு ஷோ நடத்த உள்ளார்.. இதையடுத்து முன்னாள் மேயர் முத்துவின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கிறார். இதற்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,
திமுக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் பதவிக்காக மாநில உரிமைகளை அடகு வைக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார். ஆனால், ஜெயலலிதா பெற்று தந்த முல்லைப்பெரியாறு தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு ஒரு முறையாவது வாய் திறந்து தனது கூட்டணியைச் சேர்ந்த கேரளா முதலமைச்சர் பினராய் விஜயனிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளாரா?
தென் மாவட்ட மக்களின் உரிமையைக் காக்க கோரிக்கை வைத்தாரா?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலே தென் மாவட்டகளான தேனி, மதுரை திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுடைய ஜீவாதார மாநில உரிமையை காப்பதற்கு ஒரு முறையாவது கோரிக்கை வைத்தாரா என்பதை மனசாட்சியை தொட்டு அவர் விவரங்களை வெளியிடுவதற்கு தயாரா? கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தமிழக முதலமைச்சர் அழைப்பை ஏற்று பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று விளக்கம் சொல்கிறார். இந்த நிமிடம் வரை அதற்கான மறுப்பு சொல்ல முதலமைச்சர் முன்வரவில்லை?
மாநில உரிமை என்று முதலமைச்சர் எதை பார்க்கிறார்?
காவேரி, முல்லைப் பெரியாறு, பாலாறு மற்றும் கச்சதீவு பிரச்னைகளில் மௌனம் காக்கும் முதல்வர் ஸ்டாலின் தற்போது மாநில உரிமைக்காக பதவியை அடகு வைக்க மாட்டேன் என்று சொல்வதை நகைச்சுவையாக தான் பார்க்க வேண்டுமா? இன்றைக்கு மாநில உரிமை என்று முதலமைச்சர் எதை பார்க்கிறார் தன் வாரிசு மகன் அரசு பதவிக்காக உரிமை என்பதை அவர் எடுத்துச் சொல்லுகிறாரா? நாங்கள் ஒருபோதும் மகனின் அரசியல் அதிகாரத்தை விட்டுத்தர மாட்டோம் என்று சொல்ல முன் வருகிறாரா? எதை மீட்டுக் கொடுத்திருக்கிறார்?
ரோடு ஷோ என்ற பெயரில் ஸ்டாலின் நடத்துகிற நாடகம்:
இன்றைக்கு ஸ்டாலின் ரோடு ஷோ என்ற பெயரில் நடத்துகிற இந்த நாடக அரங்கேற்றத்தை மக்கள் எப்படி பொறுத்துக் கொள்வார்கள்?. இந்த மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய, வளர்ச்சி தரக்கூடிய, வறுமையை போக்கக் கூடிய வளமான வாழ்வை உருவாக்கக் கூடிய ஒரு திட்டங்களை அறிவிக்கிறேன் என்று சொல்லி அவரை வரவேற்றாலும் கூட பரவாயில்லை .கட்சிக் கூட்டத்திலே பங்கேற்பதற்கு வருவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அதற்காக மதுரை மக்களை இன்றைக்கு நாம் எப்படி எல்லாம் கஷ்டப்படுத்துகிறோம் என்பதை ஒரு நிமிடம் அவர்கள் சிந்திக்க வேண்டும்.
போக்குவரத்து மாற்றம் என்பது ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக அமையும்:
முதலமைச்சர் வருகிறார் போக்குவரத்து மாற்றம் என்று பக்கம் பக்கமாக பத்திரிகை செய்தி வருகிறது இந்த போக்குவரத்து மாற்றம் என்பது ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக அமையும். இதுதான் மதுரை மக்களின் தீர்ப்பாக அமையும். ஏனென்றால் இது கண்ணகி நீதி கேட்ட மதுரை, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை. ஆகவே இந்த மதுரை மக்களை அவர்கள் அலோங்கோலபடுத்தவது என்பது ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை இன்னைக்கு நாங்கள் வன்மையாக தெரிவித்துக் கொள்கிறோம். நிச்சயம் ஆட்சி மாற்றம் அடித்தளமாக இந்த ரோடு ஷோ அமையும் அடுத்த ஆண்டு முதலமைச்சராக எடப்பாடியார் வருவார் அதுபோல ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக கூட வர முடியாத சூழ்நிலை உருவாகும்.
மகனின் வாரிசு அரசியலுக்காக மாநில உரிமையை விற்பனை செய்து விட்டார் ஸ்டாலின்:
மதுரையில் நடப்ப பொதுக்குழுவா அல்லது மக்களை கசக்கி பிழிகிற, மக்களுக்கு கஷ்டங்களை தருகிற, வேதனை தருகிற, கவலையை தருகிற குழுவா என்பதை மக்கள் சார்பில் நான் கேள்வியை முன்வைக்கிறேன். ஒருநாளும் மக்கள் தண்டனையிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. மாநில உரிமையை இழக்க மாட்டேன் என்று கூறி உங்கள் மகன் வாரிசு அரசியலுக்காக மாநில உரிமையை விற்பனை செய்து விட்டீர்கள். திமுகவில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு அன்னை மீனாட்சி துணை நிற்பார், மதுரை மக்களே நீங்கள் கவலைப்படாதீர்கள் காலம் மாறும் காட்சிகள் மாறும் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சர் வருவார் அப்போது மதுரை மாவட்டம் வளர்ச்சி பெறும் என்று தெரிவித்துள்ளார்.