வாணியம்பாடி பல் கிளினிக் விவகாரம்
வாணியம்பாடி பல் கிளினிக் விவகாரம்web

வாணியம்பாடி | பல் கிளினிக்கால் பறிபோன 8 உயிர்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை!

வாணியம்பாடியில் பல் கிளினிக்கில் ஏற்பட்ட அரியவகை பாக்டீரியா தொற்றால், 8 பேரின் உயிர் பறிபோன துயரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Published on

செய்தியாளர் - இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் VTS என்ற பெயரில் பல் கிளினிக் செயல்பட்டு வந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு ஸ்ரீராம் குமார் என்ற இளைஞரின் தாய் இந்திராணி இந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்றிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஓரிரு வாரத்தில் அவர் உயிரிழந்துவிட, தவறான சிகிச்சையே காரணம் என ஸ்ரீராம் குமார் குற்றம்சாட்டினார்.

இதே கிளினிக்கில் சிகிச்சை பெற்றவர்களில் 8 பேர், இந்திராணியை போல அடுத்தடுத்து உயிரிழந்திருப்பதும் பின்னர் தெரியவந்தது. தனது தாயின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ஸ்ரீராம் குமார், காவல்துறையினரால் 2 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் தொடர்ந்து போராடிய அவர், வாணியம்பாடி நகர காவல் நிலையம், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரணைக்காக நியமிக்கப்பட்டது.

வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை..

இந்த குழு விசாரணை நடத்திய தற்போது அதன் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, பல் கிளினிக்கில் பயன்படுத்தப்பட்ட கருவிகள் முறையாக தூய்மைப்படுத்தப்படாததும், ஒரே கருவியை மீண்டும் மீண்டும் பலருக்கும் பயன்படுத்தியதாலும் இந்த மரணம் நிகழ்ந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.

அதாவது பல் கிளினிக்கில் பயன்படுத்தப்பட்ட சலின் பாட்டிலை திறப்பதற்கு பெரியோஸ்டியல் லிஃப்ட் எனும் கருவி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது பல் அறுவை சிகிச்சையின்போது திசுக்களை தூக்கப் பயன்படுத்தப்படும் கருவியாகும். இந்த கருவியால் பாட்டிலை திறந்துவிட்டு, அதை சுத்தப்படுத்தாமல் நோயாளிகளிடம் கருவியை மருத்துவர் பயன்படுத்தியிருக்கிறார்.

இதனால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த கருவியை தூய்மைப்படுத்தாமல் அடுத்தடுத்த நோயாளியிடம் பயன்படுத்தியதால் 10 பேருக்கு "பர்கோல்டேரியா சூடோமல்லே" என்ற தொற்று பரவியிருக்கிறது. இது, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கொடிய பாக்டீயாவாகும். இந்த தொற்று நரம்பு மண்டலங்களை பாதிக்கச் செய்கிறது. காய்ச்சல், தலைவலி, வலிப்பு, மண்டை நரம்பு வாதம், மூளையில் சீழ்பிடித்தல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேரில் 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருத்தம் தெரிவித்த பல் மருத்துவ சங்கம்!

தற்போது இந்த துயரம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், தனது தாயை இழந்த மகன் ஸ்ரீராம் குமார், மீண்டும் காவல்நிலையத்திற்கு வந்து பல் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான ஆவணங்களை 2023ஆம் ஆண்டே மாவட்ட மருத்துவ இணை இயக்குநரிடம் சமர்ப்பித்துள்ளதாக மருத்துவர் அறிவரசன் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளது. இச்சம்பவம், மருத்துவப் பொருட்களை பாதுகாப்பாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுவதாகவும், இந்த விஷயத்தை பொறுப்புடன் கையாள தாங்கள் கூட்டாக முயற்சிக்கிறோம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com