“யார் சொல்வதையும் காதில் வாங்கிக்கொள்ள வேண்டாம்” மகளிர் மாநாட்டில் மருத்துவர் ராமதாஸ்
2026 தேர்தலில் வெற்றி கூட்டணியை அமைப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் சூளுரைத்துள்ளார். அன்புமணியின் நடவடிக்கைகளை கண்டுகொள்ள வேண்டாமென்ற தொனியில் அவர் பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில், பாமகவின் மகளிர் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தந்தைக்கு மிஞ்சிய தனயன் இருக்கக்கூடாது என கூறினார். அதற்கு உதாரணமாக பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை குறிப்பிட்டு அண்மையில் பிரதமர் மோடி பேசியதை அவர் சுட்டிக்காட்டினார். முன்னாள் முதல்வர் கருணாநியை தனது நண்பர் என குறிப்பிட்ட ராமதாஸ், முதல்வர் ஸ்டாலின் தனது தந்தையை மிஞ்சிய தனயனாக, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென வலியுறுத்தினார்.
10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்காக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தயார் எனவும், அப்படி நடத்தினால் தமிழ்நாடு தாங்காது எனவும் எச்சரித்தார். அதேபோல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், வெற்றி கூட்டணி அமைப்பேன் என கூறிய ராமதாஸ், அன்புமணியின் பெயரை குறிப்பிடமால், யார் சொல்வதையும் காதிலேயே வாங்கிக்கொள்ள வேண்டாம் என்றும், தான் சொல்வதுதான் நடக்கும் என்றும் தெரிவித்தார்.
ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலில் பாமக தனித்தனி அணிகளாக போட்டியிடும் சூழல் உருவாகிறதா என கேள்விகள் எழுந்துள்ளன.