வாக்குத்திருட்டு புகார்.. பிரத்யேக வலைத்தளம் தொடக்கம்.. காங்கிரஸ் அழைப்பு!
வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் தேர்தல் ஆணையம், மத்திய அரசுடன் இணைந்துகொண்டு வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். அதற்கான ஆதாரங்களையும் முன்வைத்தார். எனினும், அவருடைய குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. ஆயினும், இந்த விவகாரத்தில் உறுதியாக இருக்கும் ராகுல் காந்தி, தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டுமானால், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, வாக்குத் திருட்டுக்கு எதிரான தங்கள் போராட்டத்தில் பொது மக்களும் இணைந்துகொள்ளும் வகையில் பிரத்யேக வலைத்தள பக்கத்தை காங்கிரஸ் கட்சிதொடங்கியுள்ளது. VOTE CHORI என்ற வலைத்தளத்தில் மக்கள் தங்கள் புகாரை பதிவு செய்யலாம் என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. வாக்குத் திருட்டு நடந்துள்ளது என்று ராகுல் காந்தி வெளியிட்ட ஆதாரங்களை பதிவிறக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் வாக்குத்திருட்டு தொடர்பான தங்கள் அனுபவங்களையும் பதிவிடலாம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து அதற்கு மிஸ்டு கால் அளிப்பது மூலம் வாக்குத்திருட்டிற்கு எதிரான இயக்கத்தில் இணையலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு நான் வாக்குத்திருட்டிற்கு எதிரானவன் என்ற சான்றும் வழங்கப்படும். இதற்கிடையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டத்தில் மக்கள் ஒன்று திரள வேண்டும் என்றும் ராகுல் கேட்டுக்கொணடுள்ளார். வாக்குத்திருட்டு மூலம் ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற ஜனநாயக அடிப்படையே சிதைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய ராகுல், நியாயமான நேர்மையான தேர்தலுக்கு குறைபாடுகள் அற்ற வாக்காளர் பட்டியல் அவசியம் என்றும்அவர் தெரிவித்துள்ளார்.