’முதல்வர் ஸ்டாலினுக்கு இதனால் 100 ஓட்டு கூடுதலாக கிடைக்காது..’ - நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த், மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனை நினைவுகூர்ந்து, அவரின் அலுவலகம் எப்போதும் சுத்தமாக இருந்தது என்று புகழ்ந்தார். முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அவருக்கு 100 வாக்குகள் கூடுதலாக கிடைக்காது என்றார். சரவணனுக்கு, கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் மரியாதை செலுத்தியதாக கூறினார்.
மறைந்த திரைபட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏவிஎம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் AVM சரவணனின் உருவப்படத்தை திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், எம்பியும், நடிகருமான கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அனாதை போல உணர்கிறேன் - ரஜினிகாந்த்
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், பேச்சில், செயலில் தூய்மை.. அதுதான் எம் சரவணன். 75ஆம் ஆண்டில் அவரை முதல் முறையாக பார்த்தேன். முரட்டுகாளை படத்தின் போது சரவணனை வந்து சந்தித்தேன். அவரின் அலுவலகம் அவ்வளவு சுத்தமாக இருந்தது. நானும் பல அரசியல் கட்சியினர், முக்கியமானவர்கள் அலுவலகங்களுக்கு சென்றுள்ளேன். எதுவும் அப்படி இருந்தில்லை. அவர் அலுவலகத்திலேயே உக்கார்ந்து கொண்டு எல்லா படங்களையும் வெற்றி பெற வைப்பார். AVM சரவணன் சினிமாவில் மட்டும் அல்ல தனிப்பட்ட முறையிலும் நிறைய உதவிகளை செய்துள்ளார்.
ராகவேந்திரா மண்டபம் கட்டுவதற்கு முன்பு.. ஏன் இடம் சும்மா கிடக்கிறது. எதாவது கட்ட வேண்டும் என்று அவரின் மேற்பார்வையில் கட்டப்பட்டதுதான் ராகவேந்திரா மண்டபம்.
வயது ஆக ஆக பிசியாக இருக்க வேண்டும். அதுதான் உடம்புக்கும் நல்லது மனதுக்கும் நல்லது என்று சொல்லுவார். குறைந்தது வருடத்துக்கு ஒரு படம் பன்ன வேண்டும் என்று சொன்னார். அவர் சொன்னதை நான் இப்போதும் செய்துகொண்டு இருக்கிறேன்.
அவர் அரசியல் சார்ந்தவர் கிடையாது. கலைஞர், ஜெயலலிதா ஆகியோருக்கும் அவர் மீது அவ்வளவு மரியாதை இருந்துள்ளது. சிவாஜி திரைப்படம் அரசியல் கட்சியினருக்கு எதிரான படம் ஆனால் அந்த படத்தின் நிகழ்ச்சிக்கு கலைஞர் கலந்துகொண்டார். AVM சரவணுக்காக கலந்துகொண்டார்.
தற்போது முதல்வர் தன் பணியை விட்டுவிட்டு வந்துள்ளார். தேர்தல் நேரம் என்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு மணித்துளியும் ரொம்ப முக்கியமானது. அதை விட்டு விட்டு தற்போது முதல்வர் இங்கு வந்துள்ளார். இங்கு வந்ததால் அவருக்கு 100 வாக்குகள் அதிகமாக கிடைக்காது. சரவணனுகாக அவர் கலந்துகொண்டுள்ளார். முதல்வர், அன்பும் பண்பும் கொண்டவர் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
அசையும் சொத்துக்களுக்குதான் மதிப்பு அதிகம். அதுபோன்று நம்மை விரும்புபவர் சிலர் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் அசையா சொத்துக்கள். என்னுடைய அசையா சொத்து கே.பாலசந்திர், சரவணன், கலைஞர் உள்ளிட்டோர்.
நாம் யாரை மிகவும் விரும்புகிறோமோ அவர்களை காலம் சீக்கிரமாக எடுத்துக்கொள்கிறது. நமக்கு எவ்வளவு பணம், பேரு, புகழ், குடும்பம், சொத்து, பிள்ளைகள் இருந்தாலும்... அது போன்ற மனிதர்கள் விட்டு செல்லும் போது நமக்கு அனாதையானது போன்ற ஒரு உணர்வு வருகிறது என்று பேசினார்.

