பெண்களுக்கு கலாசார பாடம் எடுக்கும் ஹீரோக்கள்.. ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடா ’படையப்பா’ ரஜினி..!
ஒரு வழியாக படையப்பா ரீ ரிலீஸ் ஜுரம் ஓரளவு குறைந்திருக்கிறது. படையப்பா ரீ ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே அந்தப் படம் குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டுக் கொண்டே இருந்தது. பின்னரும் அந்தப் படத்தோடு சம்பந்தப்பட்ட பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். கடைசியாக நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் படம் பார்த்தது உள்ளிட்ட பல விஷயங்கள் நடந்தேறியுள்ளன. இதற்கு இடையில் கருத்தியல் ரீதியாகவும் பெரிய விவாதம் ஒன்றும் நடந்துக் கொண்டிருந்தது. கமர்சியல் ரீதியான படம் தானே எல்லோரும் ரஜினிகாந்தை கொண்டாடத்தானே செய்தார்கள். இதில் எங்கே விமர்சனங்கள் நடந்தது என்று கேட்டால் நிச்சயம் அது கேட்டவர்களின் அறியாமையே. சமூக வலைதளங்களில் எல்லா கொண்டாட்டங்களுக்கு நடுவே இதுவும் நடந்தது. அப்படி என்ன விவாதம் என்று கேட்கிறீர்களா? வாருங்கள் சற்றே விரிவாக பார்க்கலாம். படையப்பா குறித்த விவாதத்திற்கு போவதற்கு முன்பாக ஒரு சிறிய உதாரணம் ஒன்றை பார்த்துவிடலாம்..
சீரியல் பஞ்சாயத்து காட்சி: சினிமாவை கடந்த ஆணாதிக்க மனநிலை
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் அது. அந்த சீரியல் ஊர் பஞ்சாயத்து காட்சிகளுக்கு பெயர் போனது. அன்றைய தினமும் ஒரு பஞ்சாயத்து காட்சிதான் வந்தது. ஊர் நாட்டாமை குடும்பத்து பெண் ஒருவர் மீதுதான் புகார். அதாவது, தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு இளைஞனை அந்தப் பெண் கூற, அந்த இளைஞனோ தனக்கும் அந்த பெண்ணிற்கும் இடையே நீண்ட உறவு இருந்ததாகவும் அவர் அழைத்ததன் பெயரிலேயே வந்ததாகவும் கூறுகின்றான். அந்தப் பெண்ணின் சித்தப்பா தான் பஞ்சாயத்து சொல்லும் இடத்தில் இருக்கிறார். பஞ்சாயத்து சொல்லும் அந்த நபர் சொன்ன அந்த தீர்ப்புதான் 2025 முடிந்து 2026 பிறக்கவுள்ள இந்த காலத்திலும் இப்படியா நடக்கும் என்று வியக்க வைத்துள்ளது.
அதாவது, சம்பந்தப்பட்ட அந்தப் பெண் பூக்குழி இறங்கி தன்னை சுத்தமானவள் என்று நிரூபிக்க வேண்டும் என்பதுதான் அந்த தீர்ப்பு. அதாவது தீமிதித்து பெண்ணின் புனிதத்தை நிரூபிக்க சொல்கிறது அந்த தீர்ப்பு. இது வெறும் சீரியலில் வந்ததுதான் என்று எளிதில் கடந்துவிடக் கூடாது. சிந்தனை தளத்தில் தமிழ்நாடு பெரிய பாய்ச்சலில் சென்றுவிட்டபோதும் இப்படியான காட்சிகளை எப்படி எடுக்க முடிகிறது. கரகாட்டகாரன் படத்தில் இதேபோல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் இப்படியான காட்சியை எப்படி வைக்கிறார்கள் என்பதே ஆச்சர்யம்தான்.
படையப்பா ரீ-ரிலீஸ்: கொண்டாட்டத்துக்கு நடுவே எழுந்த விவாதங்கள்!
படையப்பா படம் குறித்த விவாதத்தை தானே பேச வந்தீர்கள் அப்படியிருக்கையில் இந்த உதாரணம் எதற்கு என்றா கேட்கிறீர்கள். ஆம், முக்கிய காரணம் இருக்கிறது. ஒரு பெண்ணை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் மேற்சொன்ன காட்சி. அந்த வகையில், நீலாம்பரி கதாபாத்திரத்தை படையப்பா ஆகிய ரஜினிகாந்த் எப்படி கையாண்டார் ஆணாதிக்க சிந்தனையின் அடிப்படையில் கையாண்டாரா என்பதுதான் விவாதமே. கமர்சியலாக படம் நன்றாக இருக்கிறது, ரஜினியின் ஸ்டைல் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கிறது, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. இவையெல்லாம் உண்மைதான், பல லட்சம் உள்ளங்களுக்கு பிடித்த படம் தான். ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டியதே இப்படியே படங்களின் வழியாக தவறான கருத்துக்களும் மக்களிடையே ஆழமாக பதிவு செய்யப்படுகிறது என்பதுதான்.
ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாக ரஜினியின் சில வசனங்கள் நேரடியாகவே இருக்கின்றன. படத்தில் ரஜினி நீலாம்பரியை பார்த்து பேசும் இரண்டு வசனங்களில் இருந்து அதனை புரிந்து கொள்ளலாம்.
“எத்தன ஜென்மம் எடுத்தாலும், அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோவப்படுற பொம்பளையும், நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது”
என்ற வசனமும்,
“பொம்பளனா பொறுமை வேணும், அவசரப் படக் கூடாது. அடக்கம் வேணும் ஆத்திரப்படக் கூடாது. அமைதி வேணும் அதிகாரம் பண்ணக் கூடாது. கட்டுப்பாடு வேணும் இப்படி கத்தக் கூடாது. பய பக்தியா இருக்கணும், இப்படி பஜாரித்தனம் பண்ணக் கூடாது. மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கணும்”
என்ற வசனமும் படையப்பா படம் பார்த்த அனைவருக்கும் மனப்பாடமாகவே இருக்கும்.
நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு எதிராக படையப்பா பேசும் வசனங்கள் ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடா?
நீலாம்பரி என்ற கதாபாத்திரத்திற்கு எதிராக படையப்பா கதாபாத்திரம் பேசும் வசனம் என்று குறிப்பிடாமல் ஏன் ரஜினி என்றே குறிப்பிடப்படுகிறோம் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதுதான் முக்கியமான காரணமும் கூட. அதாவது, ரஜினிகாந்த் தன்னுடைய படங்களில் தொடர்ச்சியாக ஆளுமைமிக்க பெண் கதாபாத்திரங்களுக்கு பாடம் எடுக்கும் காட்சிகள் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருகின்றன. ஒரு வகையில் இது வெறும் படையப்பா படம் குறித்த விவாதம் மட்டுமே அல்ல ரஜினி படங்களில் பெண் கதாபாத்திரங்கள் குறித்தும் இன்னும் சொல்லப்போனால் சினிமாக்களில் பெண் கதாபாத்திரங்களை ஹீரோக்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை குறித்த விவாதமும்தான். ‘முள்ளு மேல சேலை பட்டாலும் சேலை மேல முள்ளு பட்டாலும் கிழிய போறது என்னவோ சேலை தான்னு’ என்று வசனம் எழுதிய சினிமாக்கள் தானே இது.
தமிழ் சினிமா ஹீரோக்கள் பலரும் இதை செய்திருக்கிறார்களே..!
இது வெறும் ரஜினி காந்த் பற்றிய பிரச்னை மட்டுமல்ல.. அவரை தொடர்ந்து விஜய், தனுஷ் என முன்னணி நட்சத்திரங்களாக வரும் பலரும் இதே போன்ற தொணியில் பெண்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். சிவகாசி படத்தில் அசினுக்கு விஜய் பாடம் எடுக்கும் காட்சிதான் மிகச் சரியான எடுத்துக்காட்டு. இப்படியாகத்தான், நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு எதிராக வைக்கப்பட்டிருக்கும் வசனங்கள் தான். ஆனாலும், நீலாம்பரி எதிர்மறை கதாபாத்திரம் தானே அதனை எதிர்த்து வசனம் பேசுவதில் என்ன தவறு என்று சிலர் உள் அர்த்தம் புரியாமல் கேட்கிறார்கள். அதனை புரிந்து கொள்வதற்கு இயக்குநர் மகிழ் திருமேனி சொன்ன ஒரு வார்த்தையை இங்கே குறிப்பிடலாம்.
நீதி போதனை என்று சொன்னால் அது ஆணுக்கும் பெண்ணிற்கும் பொதுவாக வைக்க வேண்டுமே தவிர இதை ஆண்கள் செய்யலாம் பெண்கள் செய்யக் கூடாது என்று இருக்கக் கூடாது என்று அழகாக சொல்லி இருப்பார். இப்படியாக, நீலாம்பரி கதாபாத்தில் இருக்கும் எதிர்மறை தன்மைகளை விமர்சிக்கலாம். அதில் தவறு எதுவும் இல்லை. ஒரு பணக்கார பெண்ணின் திமிரை, இன்னொரு பெண்ணை விரும்பும் ஒருவரை அடைய நினைக்கும் தன்மையை எதிர்ப்பதையெல்லாம் யாரும் விமர்சிக்கப்போவதில்லை. ஆனால், ரஜினி பேசும் சில வசனங்கள் ஒரு பெண் என்ற அடிப்படையில் அதற்கான இலக்கணங்களை பழமையான கருத்துக்களின் அடிப்படையில் வைத்து கலாசார பாடம் எடுக்கும் வகையிலேயே இருக்கிறது. அதிகமாக கோபப்படுவதும், அதிகமாக ஆசைப்படுவதும் இருபாலருக்குமே தவறு என்று சொல்லலாமே தவிர ஆணிற்கு, பெண்ணிற்கு என பிரித்துப் பார்க்கக் கூடாது.
எழுத்தாளர் ஜா. தீபா பார்வையில் படையப்பா விவாதம்
இந்நிலையில், படையப்பா படம் குறித்த விவாதங்கள் குறித்து எழுத்தாளர் ஜா.தீபாவிடம் கேட்டோம். அவர் விரிவாக அதில் உள்ள தர்க்க உரையாடலை விளக்கினார்.
“படையப்பா மாதிரியான படங்கள் வெளியான காலக்கட்டத்தில் இருந்து நீண்ட தூரம் நாம் பயணித்து இன்றைய காலச்சூழலுக்கு வந்திருக்கிறோம். கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து படையப்பா ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது. ரஜினி , சிவாஜி, ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து என பெரும் ஆளுமைகள் சேர்ந்து உருவான படையப்பா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்.. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
நீலாம்பரி மாதிரி ஒரு கதாப்பாத்திரம்.. அதற்கு நேரெதிரான அடக்கமே உருவான வசுந்தரா கதாப்பாத்திரம்.. இம்மாதிரி பல்வேறு படங்களிலும் காதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அமைதியான, அடக்கமான கதாப்பாத்திரம் என்றால் நாயகியாக இருப்பார். அதற்கு நேரெதிராக தான் விரும்பும் எதையும் அடைந்தே தீருவேன், அதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்று நினைக்கும் பெண் எதிர்மறை குணாதியசங்கள் கொண்டவராக காட்டப்பட்டிருப்பார். இவர்கள் இருவரில் அமைதியான பெண்ணையே கதாநாயகன் உயர்த்திப் பேசுவார். மற்றொரு பெண்ணை அவமானப்படுத்துவதையும் நாம் பார்த்திருக்கிறோம். முன்னதாக சிவாஜியின் படங்களில் இதுபோல் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அவர் கடுமையாகப் பேசாமல் பெண்களுக்கு அறிவுரை சொல்லுவார். கமல், விஜயகாந்த் என பல நடிகர்கள் இது போன்ற படங்களில் நடித்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு பாடம் எடுக்கும் ஹீரோக்கள்..!
திமிரு பிடித்த பெண்ணை அடக்குவது கதாநாயகனின் லட்சியம் என்று நினைத்துக்கொண்டு பல நடிகர்கள் இம்மாதிரியான படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால், படத்தில் சில காட்சிகள் அம்மாதிரி வரும். படையப்பாவில் கதைக்களமே அதுதான். இருவருக்குமான மோதலும், உரசலும்தான் கதையே என்பதால் நீலாம்பரி கதாப்பாத்திரம் மனதில் நின்றுவிட்டது. அக்கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதமும் இன்றுவரை பேசுபொருளாக இருப்பதற்குக் காரணம்.
இதில் சௌந்தர்யா கதாப்பாத்திரம் என்பது படிக்காத, எப்போதும் குனிந்த தலை நிமிராத, ஆண்களைப் பார்த்தாலே பேசாத சாதாரணப் பெண். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஏழ்மையான, இன்னொரு வீட்டில் வேலை பார்க்கக்கூடிய பெண். எவையெல்லாம் ஒரு பெண்ணின் அடக்கம் என்று நாம் சொல்கிறோமோ அதன் மொத்த வடிவம் அந்தப்பெண்.
மறுமுனையில் நீலாம்பரி மாடர்ன் உடைகளை அணிந்திருப்பாள். உயர் ரக கார் வைத்திருக்கும் ஒரு பெண். அவள் சொல்வதை வீட்டில் உள்ள அனைவரும் கேட்பார்கள். மிக முக்கியமாக வெளிநாட்டில் படித்துவிட்டு வந்து நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஒரு பெண். கடந்தகால சினிமாக்களில் அடக்கமில்லாமல் ஒரு பெண் இருப்பதற்கு எவையெல்லாம் காரணமாக சொல்லப்பட்டதோ அவையெல்லாமும் சேர்ந்ததுதான் நீலாம்பரியின் கதாப்பாத்திரம். அந்தப்பெண்ணுக்கும் ரஜினி அறிவுரை சொல்கிறார். “அதிகமாக ஆசப்படுற ஆண்.. அதிகமாக கோபப்படுகிற பெண்” என்கிறார். பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று அவர் நினைப்பதன் வெளிப்பாடுதான் அது.
இதை ரஜினி செய்யலாமா என்று கேட்டால்... இத்தனை நாட்கள் வில்லன்களிடம் சிக்கியிருக்கும் பெண்களைக் காப்பாற்றி அழுத்துப்போயிருக்கும் சினிமாவில், ஒரு பெண்ணையே எதிர்க்கலாமே? வலிமையான ஒரு பெண் நமக்கு எதிரியாக இருந்தால் எப்படியிருக்கும்? அந்தப் பெண்ணை நாம் வெற்றி கொள்வது என்பது ரசிகர்கள் மனதில் எப்படி நிலைபெறும் என்று நினைத்துதான் நீலாம்பரி கதாப்பாத்திரத்தை அவர்கள் வைத்திருக்க வேண்டும். தற்போதைய காலக்கட்டத்தில் இம்மாதிரியான கதைகளையும் கதாப்பாத்திரங்களையும் வடிவமைக்க முடியுமா என்ற கேள்வி எழலாம். படையப்பாவிற்குப் பிறகும் சில இயக்குநர்கள் அதை முயற்சித்தார்கள்.
பெண்கள் இப்படித்தான் (அடக்கமான, அமைதியான) இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்த தமிழ் சினிமா.. பெண்கள் இப்படி இருந்தால் (தனக்கு என்ன வேண்டும் என்று புரிதல் இருக்கிற) அது சிக்கல், நல்லதல்ல என்று சொல்லக்கூடிய இடத்திற்கு வந்திருக்கிறது” என்றார்.
காலம் கடந்தும் தொடரும் சினிமா பாலின அரசியல்
இதனை ஏன் நாம் பேச வேண்டிய சூழல் வந்திருக்கிறது என்றால் ஆண் பாவம் பொல்லாதது என்று படம் எடுக்கும் நிலைக்கும் சிலர் வந்திருக்கிறார்கள் என்பதுதான். நம் சமூகத்தில் பெண்கள் எந்த நிலையில் இருந்து இன்றைக்கு எந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள், அந்த முன்னேற்றம் எல்லாம் எப்படி மெல்ல மெல்ல நடந்திருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. விதிவிலக்காக சில இடங்களில் நடக்கக் கூடியது பொதுப்படையாக வைத்து பெண்கள் சுதந்திர உணர்வையே கொச்சைப்படுத்தும் அளவிற்கு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய சூழலில் சில விஷயங்களைப் பற்றி பேசியே ஆக வேண்டியிருக்கிறது. சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
ரஜினி படங்களுக்கு இன்னும் அழுத்தமாக பேசியே ஆக வேண்டியிருக்கிறது. மன்னன்படத்தில் விஜய சாந்தி கதாபாத்திரத்திற்கு எதிராக ரஜினி பேசிய வசனங்களை மீண்டும் திரும்பி பார்த்தால் அது புரியும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தங்கமகன் படத்தில் வரும் பூ மாலை பாடல் மிகப் பொருத்தமான உதாரணம். நடனப்போட்டியில் ஹீரோயினை ஹீரோ வெல்வார். நடன திறமையால் அல்ல. ஆடைகள் இல்லாமல் யாரால் இருக்க முடியும் என்பதை வைத்து. எவ்வளவு அபத்தமான காட்சி இது. இதையும் நாம் கைதட்டிதான் கொண்டாடி இருக்கிறோம். அதனால், நாம் கொண்டாடிக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய அபத்தமான காட்சிகளை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
முடிவாக....
படையப்பா என்பது வெறும் ஒரு ரஜினிகாந்த் படம் அல்ல. அது ஒரு காலகட்டத்தின் சமூக மனநிலையை பிரதிபலிக்கும் ஆவணம். அந்த காலத்தில் ‘கொண்டாடப்பட்ட’ வசனங்களும் காட்சிகளும், இன்றைய பார்வையில் கேள்விக்குள்ளாகின்றன என்றால் அதுவே சமூகத்தின் வளர்ச்சிக்கான அடையாளம். விமர்சனம் என்பது ஒரு படத்தை நிராகரிப்பதற்கல்ல; அதை மீண்டும் மறுபரிசீலனை செய்து சிந்தனையில் மாற்றம் செய்து கொள்வதற்குதான்.
நீலாம்பரி கதாபாத்திரம் எதிர்மறை தன்மைகளுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது விவாதத்திற்குரிய விஷயமல்ல. ஆனால், அந்த எதிர்மறையை விமர்சிக்கும் பெயரில் ஒரு பெண்ணின் ஆளுமையே குற்றமாக்கப்படும் போதுதான் பிரச்னை தொடங்குகிறது. அதிகமாக ஆசைப்படுவது ஆணுக்கு ‘துணிச்சல்’ ஆகவும், பெண்ணுக்கு ‘அடங்காத தன்மை’ ஆகவும் மாற்றப்படும் இடத்தில்தான் ஆணாதிக்க சிந்தனை வெளிப்படுகிறது. நீதிபோதனை என்றால் அது பாலின வேறுபாடின்றி பொதுவாக இருக்க வேண்டும்.
இன்றைய காலத்தில் இப்படியான வசனங்கள் கேள்விக்குள்ளாகின்றன என்றால், அது ரஜினிகாந்த் அல்லது படையப்பாவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்காக அல்ல. நாமே ஒருகாலத்தில் கைதட்டிய காட்சிகளை இன்று விமர்சிக்கும் அளவிற்கு சமூகமாக நாம் நகர்ந்திருக்கிறோம் என்பதற்கான சான்றுதான் அது. சினிமா சமூகத்தை வடிவமைக்கிறது; அதே நேரத்தில் சமூக மாற்றமும் சினிமாவை கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளது.
பெண்கள் அடக்கமாக இருந்தால்தான் நல்லவர்கள், அதிகாரம் கொண்டால் ஆபத்தானவர்கள் என்ற பிம்பத்தை உடைத்தே ஆக வேண்டிய கட்டத்தில் தமிழ் சினிமா நிற்கிறது. அந்த உடைப்பின் ஒரு பகுதியாகத்தான் படையப்பா மீண்டும் பார்க்கப்படுகிறது; அதனுடன் சேர்ந்து அதிலுள்ள வசனங்களும், பார்வைகளும் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. இந்த விவாதமே ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம்.

