“விஜயை பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்ததை கடந்துபோக முடியாது; ஆனால்..” - ப்ரியன் உடைத்து சொன்ன விஷயம்!
செய்தியாளர் - செ.வாசு
2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் தமிழ்நாட்டில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பரப்புரைகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் என ஒவ்வொரு கட்சியும் அனல்பறக்க வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய் தலைமையில் புதிதாக அமையவுள்ள கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்குமுனைப் போட்டி இந்த தேர்தலில் அமையும் என்று தெரிகிறது. நாம் தமிழர் கூட்டணி இல்லை, தனித்துதான் போட்டி என்று அறிவித்துவிட்டது. விஜய் ஆட்சியில் பங்கு என்று அறிவித்தும் கூட இன்றுவரை தவெகவுடன் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை. இனிமேல் நடக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அதிமுக கூட்டணியில் பாஜக, தமாக கட்சிகள் உள்ளன. அன்புமணி தரப்பு பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் வருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த சூழலில் திமுக கூட்டணியைப் பொறுத்தவரை கடந்த தேர்தல்களை போலவே அப்படியே தொடரும் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனாலும், சமீபகாலமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் குறித்த பேசுபொருள் இருந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தவெக உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக கூறப்பட்டு வருகிறது. கரூர் துயர சம்பவத்தின் போது விஜய் உடன் தொலைபேசியில் பேசி ராகுல் காந்தி ஆறுதல் சொன்னதாக செய்திகள் கசிந்தது. அதன் பின்னர் விமர்சனங்கள் வரவே அதனை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் அப்படியே அமுக்கிவிட்டார்கள். அதன் பிறகு சமீபத்தில் ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும் காங்கிரஸ் கட்சியின் தரவுகள் நிபுணருமான பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜயை சந்தித்தது பேசுபொருளானது. அதேபோல், விஜயின் தந்தை சந்திரசேகரை காங்கிரஸ் மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமி சந்தித்ததும் பேசுபொருளானது.
இந்நிலையில், திமுகவை விட்டு தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி சேருமா? காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்தித்ததை எப்படி புரிந்து கொள்வது? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் இடம் கேள்வி எழுப்பினோம். ப்ரியன் பேசுகையில், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் திமுக தலைமையிலான கூட்டணி, இந்திய அளவில் இந்தியா கூட்டணி ஒற்றுமையா மூன்று தேர்தலை சந்தித்து வருகிறார்கள். அதில், தொடர்ந்து வெற்றியையும் பார்த்து வருகிறார்கள். இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் வேறு பல கட்சிகள் அத்துடன் புதுசா வந்திருக்க விஜய் உள்ளிட்டோர், அதிகாரத்தில் பங்கு என்பதை முன்வைக்கின்றனர். அது பல கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
திமுக, அதிமுக இரண்டு கட்சிகள்தான் இதுவரைக்கும் (50 ஆண்டுகளாக) ஆட்சி அமைத்துள்ளனர். அதனால் இரண்டு கட்சிகளுமே கொள்கை ரீதியாக ஒப்புதல் கொடுக்காமல் இருக்கிறார்கள். நிறைய கட்சிகள் அதைப் பற்றி பேசிவருகிறார்கள். மேலும், காங்கிரஸ் அதிக தொகுதிகள் வேண்டும் மற்றும் ஆட்சி பங்கு, 115 தொகுதியில் போட்டி என காங்கிரஸ் பார்வையாளர் சொல்வதை பார்த்தோம். திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணியில் குழப்பம் ஏற்படுகிறது தெளிவாக முடிவு எடுக்குமாறு கூறியுள்ளார்.
பீகார் தேர்தல் முடிந்த பின் காங்கிரஸ் தலைமையில் குழு அமைத்து தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு எனப் பேசி முடிவெடுப்பார்கள் என நினைத்தார்கள். இதற்கு இடையே பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்தித்திருக்கிறார். அவர் ராகுலுக்கு வேண்டியவர். அந்த செய்தியை கடந்துபோக முடியாது. தமிழ்நாட்டில் கூட்டணியை சிதைக்கும் நோக்கில் வந்தாரா? திமுகவுடன் சீக்கிரமா பேச்சுவார்த்தை நடத்தி, அதில் அதிக தொகுதி கேட்டு கொடுக்கவில்லை என்றால் விஜய் பக்கம் போவதற்கு பேசுவரத்தை நடத்த வந்தாரா தெரியவில்லை என்று யோசிக்க நிறைய இருக்கிறது.
ஆனால், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போவதற்க்கு வாய்ப்பில்லை. ஏன் என்றால் மூன்று தேர்தலில் வெற்றியை பார்த்த கூட்டணியாக இருக்கு. இரண்டாவது தமிழ்நாடில் விஜய்க்கு என்ன வாக்கு வங்கி உள்ளது என்று தெரியாமல் போவதற்கு வெற்றி கூட்டணியில் தொடருவோம் என்று நினைப்பார்கள் கூட்டணியை விட்டு போவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு" எனக் கூறினார்.

