விண்ணை முட்டும் விலை.. தங்கத்தை வாங்கிக் குவிக்கும் தனியார் நிறுவனங்கள்!
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், கடந்தாண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சத்து 120 ரூபாய் மட்டுமே. ஆனால், கடந்த 29 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரம் விலை உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், தங்கம், வெள்ளி விலை வரலாற்றில் இல்லாத அளவாக புயல் வேகத்தில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுவரை இப்படி ஓர் உயர்வு நடந்ததே இல்லை என நகை வணிகர்களே கூறும் அளவிற்கு, கிராமுக்கு 1,190 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் 16,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 9,520 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்துடன் போட்டிபோட்டுக் கொண்டு வெள்ளி விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்னையில் கிராமுக்கு 25 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 425 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு 25 ஆயிரம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச காரணிகளே தங்கம், வெள்ளி விலையை தீர்மானிக்கின்றன. எப்போதெல்லாம் சர்வதேச அளவில் அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகிறதோ, அப்போதெல்லாம் தங்கம் விலை உயர்வது வழக்கம். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைப் பாதுகாக்க தங்கத்தில் முதலீடு செய்வதால், அதற்கான தேவை அதிகரித்து விலை உயர்கிறது. வெள்ளி பெரும்பாலும் தொழில் பயன்பாட்டுக்கானது. மின்வாகனம், சோலார் பேனல் தயாரிப்புகளால் வெள்ளிக்கான தேவை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை வேகமாக உயர்வதால், முதலீட்டாளர்கள் தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளியில் முதலீடு செய்யும் போக்கும் உருவாகியுள்ளது.
தங்கம் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு விலையேறும் என 5 ஆண்டுகளுக்கு முன் பொருளாதார நிபுணர்கள் சொல்லும்போது பலரும் அதை நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், தற்போது நம்ப முடியாத அளவிற்கு அதன் விலையேற்றம் உள்ளது.1920ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை 21 ரூபாயாக இருந்தது. அது 3 மடங்காக உயர 35 வருடங்களானது. முதன்முறையாக தங்கத்தின் விலை 1980களில்தான் சவரன் ஆயிரத்தைத் தொட்டது. 2006ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே. கடந்த 2020ஆம் ஆண்டுகூட தங்கத்தின் விலை சவரன் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே. கடந்தாண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சத்து 120 ரூபாய் மட்டுமே. ஆனால், கடந்த 29 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரம் விலை உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அரசியல் மற்றும் வணிக பதற்றங்கள் காரணமாக மைய வங்கிகள் தங்கத்தை வாங்கிக் குவிப்பதே அதன் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் சிலவும் தங்கத்தை அதிகளவில் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கிரிப்டோகரன்ஸி வெளியிடும் நிறுவனமான டெதர் என்ற நிறுவனமும் கடந்தாண்டில் 70 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இதனிடம் தற்போது 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 140 டன் தங்கம் உள்ளது. இத்தங்கம் சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பாக நிலத்தடி அறையில் வைக்கப்பட்டுள்ளது. டாலர் மற்றும் அரசுப் பத்திரங்களைவிட தங்கமே அதிக பாதுகாப்பானது என இந்நிறுவனம் கூறியுள்ளது.

