சற்றே குறைந்த தங்கம்.. ஏறுமுகத்தில் வெள்ளி விலை.. அதிக முதலீடு நஷ்டமா? எச்சரிக்கும் நிபுணர்கள்!
தொடர் உச்சத்திலேயே வர்த்தகமாகி வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று சற்றுக் குறைந்துள்ளது. கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து 14,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 520 குறைந்து ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. சென்னையில் இன்று கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 387 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 87ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சர்வதேச காரணிகளே தங்கம், வெள்ளி விலையை தீர்மானிக்கின்றன. எப்போதெல்லாம் சர்வதேச அளவில் அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகிறதோ, அப்போதெல்லாம் தங்கம் விலை உயர்வது வழக்கம். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைப் பாதுகாக்க தங்கத்தில் முதலீடு செய்வதால், அதற்கான தேவை அதிகரித்து விலை உயர்கிறது. வெள்ளி பெரும்பாலும் தொழில் பயன்பாட்டுக்கானது. மின்வாகனம், சோலார் பேனல் தயாரிப்புகளால் வெள்ளிக்கான தேவை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை வேகமாக உயர்வதால், முதலீட்டாளர்கள் தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளியில் முதலீடு செய்யும் போக்கும் உருவாகியுள்ளது. அந்த வகையில், தொடர் உச்சத்திலேயே வர்த்தகமாகி வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று சற்றுக் குறைந்துள்ளது. கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து 14,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 520 குறைந்து ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேசமயம், வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. சென்னையில் இன்று கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 387 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 87ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதற்கிடையே, நடப்பாண்டில் தங்கம் விலை ஒரு சவரன் ஒன்றரை லட்சம் ரூபாயை எட்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். டாலர் சார்பைக் குறைக்க சீனா, போலந்து போன்ற நாடுகளின் மத்திய வங்கிகள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 60 மெட்ரிக் டன் தங்கத்தை வாங்குகின்றன. இதனால் உலகளவில் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது. உலக தங்க கவுன்சிலின் தரவுகளின்படி 2025இல் கோல்டு இடிஎப்களில் 8 லட்சத்து 10ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எடை அளவில் பார்த்தால் சுமார் 801 டன் தங்கம் இடிஎப்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் தங்கத்தின் விலை 64 சதவிகிதம் உயர்ந்தது. நடப்பாண்டு தற்போது வரை17 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது. உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் சரியாகும் வரை தங்கம் விலை தொடர்ந்து ஏறவே செய்யும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். முதலீட்டு போர்ட்போலியோவில், தங்கம், வெள்ளி சேர்த்து அதிகபட்சமாக 20 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், 50 சதவிகிதத்திற்கு மேல் வைத்தால் அது ஆபத்தில்தான் முடியும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

