பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்.! நீதிமன்றம் அதிரடி!
திமுக மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்கள், சைவம், வைணவம் குறித்து சர்ச்சை பேச்சு நடத்திய வழக்கில், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. கவுன்சிலர் உமா ஆனந்தன் புகாரின் அடிப்படையில் தொடங்கிய வழக்கை தடுக்க உயர்நீதிமன்றத்தில் முயன்றும் தோல்வியடைந்த நிலையில், செப்டம்பர் 2க்குள் கைது செய்து ஆஜர்படுத்த போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி, பதவியில் இருந்தபோதே சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து தனது பதவியை பறிகொடுத்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, சைவம், வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் தெரிவித்த கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்தப் பேச்சு மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், வெறுப்பைத் தூண்டும் வகையிலும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தனிபுகார் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, பொன்முடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 2-ஆம் தேதி தள்ளுபடி செய்ததுடன், வழக்கு விசாரணையைத் தொடர அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், இன்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி தரப்பில் நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், பொன்முடியை செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் பிறப்பித்து காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் திமுக இளைஞரணி தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி, சர்ச்சைக்குரியதாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணை முடிந்த பின்னர் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த நீதிமன்ற நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர

