‘Society பாவங்கள்’ வீடியோ எதிரொலி | “அவங்கள கைது செய்யுங்க” - கோபி - சுதாகர் மீது போலீசில் புகார்
பரிதாபங்கள் Youtube channel-க்கு தடை விதிக்க வேண்டும் எனக் குறி புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் நெடிசன்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் யூடியூபர்கள் என்றவுடன் நினைவில் உதிக்கும் சில யூடியூபர்களின் வரிசையில் நிச்சயம் கோபி சுதாகருக்கு பிரத்தியேக இடமுண்டு. 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட பரிதாபங்கள் சேனலின் தற்போதைய சப்ஸ்கிரைபர்ஸ் 6 மில்லியனிற்கும் மேல். குடும்பங்களில் நடப்பவை, சமூதாயத்தில் நடைபெறுபவை என அன்றாடங்களில் சுலபமாகக் கடந்து செல்லும் விசயங்களையெல்லாம் பகடியாக்கி வீடியோக்களை வெளியிட்டு வரவேற்பைப் பெற்று வருகிறது கோபி சுதாகர் காம்போ.
பரிதாபங்கள் சேனலில் தொடர்ச்சியாக இவர்கள் வெளியிட்டு வரும் வடக்கு ரயில் பாவாங்கள் , புல்லிங்கோ பாவங்கள் , குடி பாவங்கள், புயல் பாவங்கள் உட்பட பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் என்றும் ட்ரெண்டிங்கில் இருப்பவை. இவர்களின் நையாண்டி பாணியில் ஆகஸ்ட் 4ம் தேதி சொசைட்டி பாவங்கள் என்னும் பெயரில் வெளியிடப்பட்ட வீடியோதான் தற்போது இத்தனை சலசலப்பிற்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
நெல்லையில் நடைபெற்ற கவீன் ஆணவப் படுகொலையை மையப்படுத்தி சமுதாயத்தில் படித்த இளைஞர்கள் எவ்வாறு சாதிய கட்டமைப்பிற்குள் சிக்கிக்கொண்டு வன்முறையை சர்வ சாதாரணமாகக் கையிலெடுத்து வருகின்றனர் என்பதை இவர்களுக்கே உண்டான நகைச்சுவை பாணியில் பதிவு செய்து வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நகைச்சுவை கலந்து எந்த ஒரு தரப்பையும் காயப்படுத்தாமல் சமூக அக்கறையுடன் கூடிய வீடியோவாக இது இருப்பதாகவும் சமுதாயத்தின் நிலவும், யாரும் பேச அஞ்சும் விஷயங்களை தைரியமாகப் பேசியிருப்பதாகவும் கோபி, சுதாகர், டிராவிட் ஆகியோருக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன.
அதே சமையம் இந்த வீடியோ சில பிரிவினரை குறிப்பிட்டு தாக்குவதாக இருப்பதாகவும் வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றும் இந்த குறிப்பிட்ட வீடியோவிற்கு சாதியை ஆதரிப்போர் சங்கத்தினரிடமிருந்து எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில்தான் இதன் அடுத்தகட்டமாக கோவை மாவட்ட வழக்கறிஞர் கார்த்திக் தனுஷ்கோடி என்பவர் கோபி சுதாகர் மீதும் பரிதாபங்கள் சேனல் மீதும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் திருநெல்வேலியில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடந்த கொலை பிரச்சினையை கொண்டு இரு சமூகத்திற்கு எதிராக கருத்துக்களை சித்தரித்துள்ளதாகவும் வீடியோவில் பயன்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு வன்முறையைத்தூண்டும் வகையில் வீடியோ பதிவு செய்து வெளியிட்ட கோபி, சுதாகர், டிராவிட் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் எனவும் , இந்த வீடியோவை நீக்க வழியுறுத்தவேண்டும் எனவும் பரிதாபங்கள் சேனலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு அவர் புகார் அளித்திருப்பது மீண்டும் நெட்டிசன்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை துணிச்சலுடன் கூறியுள்ள கோபி - சுதாகர் தரப்பினருக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களிலும், அந்த வீடியோவின் கீழும் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன், அந்த வீடியோவில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் யாவும் சாதியின் பெயரால் அதனை தங்களுடைய சுய நலத்திற்காக பயன்படுத்தும் நபர்கள் குறித்தும், அந்த நபர்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை இழக்கும் இளைஞர்கள் குறித்துமே பேசப்பட்டுள்ளது. அதனால், அவர்களுக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.