"திமுக அரசு ரூ.4 லட்சம் கோடி ஊழல்" - ஆளுநரிடம் எடப்பாடி கே.பழனிசாமி புகார்.. பின்னணியில் பாஜக.?
தமிழகம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி திமுக ஆட்சிதான் என்றும், திமுக ஆட்சியை ஒழித்தே தீருவோம் என்றும் புதுக்கோட்டை கூட்டத்தில் காட்டமாகப் பேசினார். அடுத்த நாள் அவரை அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்துவது குறித்தும், திமுக கூட்டணியின் பலவீனங்களைப் பயன்படுத்திக்கொள்வதும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன் தொடர்ச்சியாகவே ஆளுநரைச் சந்தித்திருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி.
மக்கள் மாளிகைக்கு நேரில் சென்ற எடப்பாடி கே.பழனிசாமி, கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாகக் கூறி, அதன் பட்டியலையும் ஆளுநரிடம் வழங்கினார். அதன்படி, டாஸ்மாக், கலால் துறையில் 50 ஆயிரம் கோடி, பத்திரப் பதிவுத் துறையில் 20 ஆயிரம் கோடி, பள்ளிக்கல்வித் துறையில் 5 ஆயிரம் கோடி, உயர்கல்வித் துறையில் ஆயிரத்து 500 கோடி, சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரம் கோடி என, மொத்தம் 4 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக பட்டியலை அடுக்கிய எடப்பாடி பழனிசாமி, கிட்னி முறைகேட்டிலும் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு தொடர்பு இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
அமித் ஷாவை சந்தித்து வந்த எஸ்பி வேலுமணி, தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் ஆளுநரையும் சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதாவது, கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம், திமுகவின் 11 அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை வெளியிட்டார், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை. அதே பட்டியல்தான் மேலும் சில மாற்றங்களுடன் தற்போது ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேநேரம், இந்தப் புகார் மீது ஆளுநர் ரவி தரப்பில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதன் பின்னணியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதல் இருக்கலாம் எனவும், தேர்தல் நெருக்கத்தில் திமுகவின் முக்கிய அமைச்சர்களையும், செயல்வீரர்களையும் மத்திய விசாரணை அமைப்புகள் வளைப்பதற்கான துருப்புச்சீட்டாக இந்த புகார் மாறலாம் என்றும் கூறப்படுகிறது. வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிகள் மீது எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் புகார் கொடுப்பது வெறும் சம்பிரதாயமான நிகழ்வாகவே இருந்திருக்கிறது. 2020இல், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, அதிமுக அரசு மீதும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும், 97 பக்க ஊழல் புகாரை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கினார் மு.க.ஸ்டாலின். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்படியான சம்பிரதாயமாக பழனிசாமியின் புகார் மாறுமா, திமுகவை சிக்கலுக்கு ஆளாக்குமா என்பதே இப்போது தமிழக அரசியலின் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

