155 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் உருவாகும் புயல் சின்னம்.. 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், 155 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் உருவாகும் 21ஆவது புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காவிரிப் படுகை மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் நோக்கி வரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஜனவரி 9 முதல் 12-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குத் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைய உள்ளது. 155 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் உருவாகும் 21ஆவது புயல் சின்னம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு வரும் 10ஆம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

