‘இலைக்கு Good Bye.. தாமரை பக்கம் சாய்ந்தது மாம்பழம்’.. உறுதியானது பாஜக - பாமக கூட்டணி! நடந்தது என்ன?

அதிமுக உடன் பாமக கூட்டணி உறுதி என சொல்லப்பட்ட நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ், பிரதமர் மோடி, அன்புமணி ராமதாஸ்
எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ், பிரதமர் மோடி, அன்புமணி ராமதாஸ்pt web

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்த தேசமும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. தமிழக அரசியலிலும் பல திருப்பு முனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடுகளை முடித்த நிலையில் அடுத்தக்கட்டப் பணிகளை தொடங்கியுள்ளது. நாளைமறுதினம் வேட்புமனுத் தாக்கல் தேதி தொடங்க உள்ள நிலையில் அதிமுக முகாம் பெரும் பரபரப்பு இல்லாமலே காணப்பட்டது.

edappadi palanisamy
edappadi palanisamypt

’மெகா கூட்டணி அமைக்கப்படும்’ என அதிமுக பொதுச்செயலாளர் அறிவித்த நிலையில், தொடர்ந்து அதற்கான பணிகளில் அதிமுக தலைவர்கள் ஈடுபட்டனர். ஆனால், கூட்டணிக்கான பேச்சுவார்த்தைப் பணிகள் என்பது மந்தமாகவே நடைபெற்று வந்தது. கடந்த தேர்தலில் கூட அதிமுக பலமான கூட்டணியை அமைத்திருந்தது. ’திமுக எதிர்ப்பு’ என்ற ஒற்றைப் புள்ளி அதிமுக கூட்டணிக் கட்சிகளை ஒன்று சேர்த்தது. ஆனால், அத்தகைய இணைப்பு இப்போது எடுபடவில்லை. அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக தனியே சென்ற நிலையில், ஜிகே வாசனின் தமாக உள்ளிட்ட சில கட்சிகள் பாஜகவுடன் சென்றன.

உறுதியாக நின்ற திமுக கூட்டணி

அதிமுகவும் திமுக கூட்டணியில் இருந்து ஓரிரு கட்சிகளையாவது தங்களது பக்கம் இழுக்க முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும், பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் இணைந்திருப்பவை. அகில இந்திய அளவில் INDIA கூட்டணியில் சலசலப்புகள் எழுந்தபோதும், திமுக தலைமையிலான கூட்டணியில் எவ்வித சிக்கலும் இல்லாமல் தொகுதிப் பங்கீடுகள் முடிந்தது. விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், “திமுக கொடுக்கவும் இல்லை, நாங்கள் பெறவும் இல்லை. இடங்களைப் பகிர்ந்துகொண்டோம்” என தெரிவித்திருந்தார்.

அதிமுக தலைமையோ, பாஜக தேசிய தலைமையை எதிர்க்கவில்லை, “பாஜக உடனான கூட்டணி இல்லை” என்பதை மட்டுமே மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது. அவர்களது எதிர்ப்பு என்பது அண்ணாமலையை சுற்றியே இருந்தது. இதன் காரணமாக அதிமுக எப்போது வேண்டுமானாலும் பாஜக உடன் கூட்டணி அமைக்கும் என்று திமுக கூட்டணிக்கட்சிகள் குற்றம் சாட்டின.

அதேசமயத்தில் அதிமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடனும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தியது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவோ 4 மக்களவைத் தொகுதி ஒரு ராஜ்ய சபா தொகுதியில் உறுதியாக இருக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால், அதிமுக அதற்கு தயாராக இல்லை என கூறப்பட்டது. பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ் அதிமுக தலைமையிலான கூட்டணியிக்கு செல்ல விருப்பப்பட்டதாகவும், ஆனால் அன்புமணி ராமதாஸ் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு செல்ல விருப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது.

பாமகவிற்கு அதிமுக உடன் என்ன சிக்கல்?

பாமகவின் பாஜக விருப்பம் குறித்து புதிய தலைமுறையின் பெருஞ்செய்தி நிகழ்ச்சியின் நேர்காணலில், பத்திரிக்கையாளர் சிவப்பிரியன் கூறுகையில், “அதிமுக கூட்டணிக்கு சென்றால் பாமக அதிக தொகுதிகளில் போட்டியிட முடியாது. ஆனால் பாஜக உடன் சென்றால் அதிக தொகுதிகளில் போட்டியிட முடியும். அவர்களது 5% வாக்குவங்கி என்பது நிரந்தரமானது. இதை தக்கவைத்துக்கொண்டே இருந்தால் அடுத்த தேர்தலில் கூட கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது உதவலாம். பாமகவிற்கு அதிமுக கூட்டணியில், ராஜ்யசபா சீட் கேட்டு வாங்குவதென்பது பெரும் பிரச்சனை இல்லை. ஆனால், அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், 2026 தேர்தலில் அன்புமணியை முன்னிறுத்துவோம் என அவர்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். அன்புமணியை முன்னிறுத்தி அவர்கள் தேர்தலை சந்திக்கும் போது அவர்கள் அதிமுகவிடம் ஒரு சீட் வாங்கியது போன்ற சூழல் இருக்கக்கூடாது. ஆனால் பாஜக என்றால் வேறு மாநிலங்களில் தான் சீட் கொடுப்பார்கள் எனவே சிக்கல் இருக்காது” என்றார்.

அதிமுக - பாமக கூட்டணி என வெளியான தகவல்

ஆனால், பாமகவின் கீழ்மட்ட தொண்டர்களுக்கு பாஜகவுடன் கூட்டணிக்கு செல்வதில் விருப்பமில்லை என்றே கூறப்பட்டது. இதையே, நிறுவனர் ராமதாஸும் பிரதிபலித்தார். இத்தகைய சூழலில் அதிமுக - பாமக கூட்டணி இறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியானது. நாளை மறுதினம் (மார்ச் 20) தொகுதிப் பங்கீட்டுக்கான உடன்படிக்கை கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸை தைலாபுரத்தில் சந்திப்பார்கள் என்றும் தகவல் வெளியானது.

“பாஜக - பாமக கூட்டணியே உறுதியாகும்” - பத்திரிக்கையாளர் ப்ரியன்

பத்திரிகையாளர் ப்ரியன்
பத்திரிகையாளர் ப்ரியன்புதிய தலைமுறை

ஆனால் பாமகவோ பாஜக தலைமையிலான கூட்டணிக்கு செல்ல இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “அதிமுக பாஜக இருகட்சிகளும் பிரிந்து இருக்காது, எப்படியும் இணைந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தேமுதிக, பாமகவினர் காத்திருந்தார்கள்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தனியாக சென்றது. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை தங்களது கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளிடையே போட்டி நடந்தது. இந்த போட்டியை பயன்படுத்திக்கொண்ட அக்கட்சிகளும் தங்களது டிமாண்டை அதிகரித்த வண்ணம் இருந்தனர்.

அதிமுக உடனான பாமக கூட்டணி இறுதியாகும் என்ற செய்திகளை கிளப்பிவிட்டது அதிமுக தான். ஆனால் உண்மையில் அம்மாதிரியாக ஏதும் நடக்கவில்லை. நாளை சேலத்தில் நடைபெறும் பிரதமரின் கூட்டத்தில் அன்புமணி கலந்துகொள்கிறார். அதனால், அதிமுக உடன் பாமக செல்வது சந்தேகமான விஷயமாக இருக்கிறது. அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாமல் எதையும் இறுதி செய்ய முடியாது. அன்புமணி பிரதமரது கூட்டத்தில் கலந்துகொள்கிறார் என்றால் அவர் அதிமுக உடனான கூட்டணியில் எப்படி இருப்பார். அதிமுக பாமகவிற்கு ராஜ்யசபா ஒதுக்கவில்லை என்று நினைக்கின்றேன்.

டாக்டர் ராமதாஸ், பிரதமர் மோடி, அன்புமணி ராமதாஸ்
டாக்டர் ராமதாஸ், பிரதமர் மோடி, அன்புமணி ராமதாஸ்pt web

அதேபோல் பாஜக உடன் செல்வதிலும் பாமகவிற்கு பெரிய அளவில் ஆதாயம் ஏதும் இல்லை. பாமகவிற்கு வடமாவட்டங்களில் தனித்து வெற்றி பெறுவதற்கான செல்வாக்கு ஏதும் இல்லை. பாமகவிற்கு மற்ற கட்சிகளது வாக்குகளும், மற்ற கட்சிகளுக்கு பாமகவின் வாக்குகளும் ட்ரான்ஸ்ஃபர் ஆவதுஇல்லை. ஒரு தொகுதியில் வெற்றி பெறும் அளவிற்கு பாமகவிற்கு வாக்குவங்கி இல்லை. மற்ற சமூகத்தினரது வாக்குகளோ, சிறும்பான்மையின, பட்டியலின மக்களது வாக்குகளோ பாமகவிற்கு கிடைப்பதில்லை.

பாஜக எப்படி அனுமதிக்கும்...

அதிமுக கூட்டணியை விட பாஜக கூட்டணிக்கு பாமக சென்றால் அதிகமான தொகுதி மட்டுமல்ல, தேர்தல் செலவிற்கு பணமும் கிடைக்கும். மத்தியில் மீண்டும் பாஜக வந்துவிட்டால் அமலாக்கத்துறை போன்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கலாம். அன்புமணி மேல் சிபிஐ வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ளது. பாமகவில் பெரும்பாலானோர் அதிமுகவிற்கு செல்ல வேண்டும் என வற்புறுத்தியதாகத்தான் தகவல். ஆனால் அன்புமணி இம்மாதிரியான காரணங்களைச் சொல்லி, 2026 தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடிபுதிய தலைமுறை

அதேசமயத்தில் அதிமுக உடன் இக்கட்சிகள் செல்வதை பாஜக எப்படி வேடிக்கை பார்க்கும். இவர்களுடன் இருந்த கட்சிகள் எல்லாம் அதிமுக உடன் இணைந்து வலிமையான கூட்டணி அமைப்பதை பாஜக எப்படி பார்த்துக்கொண்டு இருக்கும். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் கூட அரசை கவிழ்க்கிறார்கள். ஆட்களை இழுக்கிறார்கள். தங்களது கூட்டணி பலவீனமடைவதை பாஜக பார்த்துக்கொண்டிருப்பார்களா? தேமுதிகவும் அதிமுக உடன் செல்வதை கையெழுத்து போடும் வரை நம்பமுடியாது” என்றார்.

‘தேச நலன்' கருதி கூட்டணி’ - உறுதியானது பாஜக - பாமககூட்டணி!

பாமக உயர்மட்டக் குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக உடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 10 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, ‘உயர்மட்ட குழு கூட்டமும், மாவட்ட செயலாளர் கூட்டமும் நடைபெற்றுள்ளது. மருத்துவர் ஐயா அறிவித்த உடன், நான் கூட்டணி பற்றி பேசுகிறேன். தேச நலன் கருதியும், நாட்டின் நலன் கருதியும், தமிழக நலன் கருதியும், பாமக தொண்டர்களின் நலன் கருதியும் நல்ல முடிவை எடுத்துள்ளோம்’ என்று சூசகமாக கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் பாஜக உடன் கூட்டணி அமைக்க பாமக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அத்துடன், எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் விவரங்களை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் என்று கூறினார்.

பாமக - பாஜக இடையிலான கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், அதிமுகவிற்கு அடுத்த உள்ள பெரிய கட்சி தேமுதிக மட்டுமே. தேமுதிகவும் இல்லை என்றால் அதிமுக தெரிவித்த மெகா கூட்டணி என்பது அமையாமலே போய்விட்டது என்றே சொல்லலாம். ஆனால், பாமக வந்துள்ளதால் பாஜக பெரிய கூட்டணியை அமைத்துள்ளது என்றே சொல்லலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com