விக்கிரவாண்டி | ஜெயலலிதா, MGR-ஐ கையில் எடுக்கும் பாமக, திமுக, நாதக... அதிமுக வாக்குகள் யாருக்கு?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அதிமுக வாக்குகளைக் குறிவைப்பது ஏன்? இதற்கு அதிமுகவின் எதிர்வினை என்ன? பார்க்கலாம்..
ஸ்டாலின் - அன்புமணி - சீமான்
ஸ்டாலின் - அன்புமணி - சீமான்புதிய தலைமுறை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க-வினர் பரப்புரை செய்யும் போஸ்டரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா புகைப்படத்துடன் பாமக பிரசாரம்
ஜெயலலிதா புகைப்படத்துடன் பாமக பிரசாரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. அதனால் அதிமுக-வின் வாக்குகளை பெறுவதற்கு பா.ம.க மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் உச்சகட்டமாக, பாமக தன் பரப்புரைக்கு அச்சிடப்பட்ட போஸ்டரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்தது.

ஸ்டாலின் - அன்புமணி - சீமான்
ஆதரவு சீமான்.. ஆக்ரோஷ அன்புமணி.. அமைதி திமுக... - அதிமுக வாக்குகளை பெற முட்டி மோதும் கட்சிகள்

பா.ம.க வேட்பாளர் சி. அன்புமணியை, அதிமுக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் ஏற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸே வலியுறுத்தி இருக்கிறாரும்கூட. இதனால் பாஜக - அதிமுக கூட்டணியில் இருக்கிறாதா என்ற கேள்வியும் எழுந்துவந்தது. இன்று காலைகூட நேரடியாக அதிமுக தொண்டர்களிடம் தங்களுக்கு வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் அன்புமணி.

இதற்கிடையே யாரும் எதிர்பாரா விதமாக தற்போது திமுக-வினரும் களத்தில் இறங்கி, “அதிமுக ஓட்டு எங்களுக்குத்தான். ஏன்னா எம்.ஜி.ஆர் திமுக-வில் இருந்தவர்” எனக்கூறி எம்.ஜி.ஆர்-ஐ தங்கள் வசம் இழுக்கின்றனர்.

இப்படியாக ஜெயலலிதாவின் பெயரில் பாமக பிரசாரம், எம்.ஜி.ஆர் பெயரில் திமுக நூதன பிரசாரம் என விக்கிவராண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகளை குறிவைத்து கட்சிகள் தீவிரமான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.

பாமக, திமுக மட்டுமல்ல, நாம் தமிழர் கட்சியும் அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததோடு , அதிமுகவினர் தங்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்கிற கோரிக்கையை நேரடியாகவே முன்வைத்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அதிமுக வாக்குகளைக் குறிவைப்பது ஏன்? இதற்கு அதிமுகவின் எதிர்வினை என்ன? பார்க்கலாம்..

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் கோப்புப்படம்

விக்கிரவாண்டி எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி மரணமடைந்ததையொட்டி, அந்தத் தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, அதன் கூட்டணிக் கட்சியான தேமுதிக தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துவிட்டது. அதனால், திமுக, பாமக, நாதக இடையிலான மும்முனைப் போட்டியாக களம் மாறியிருக்கிறது.

ஸ்டாலின் - அன்புமணி - சீமான்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக, தேமுதிக களத்தில் இல்லை... வெற்றி வாய்ப்பு யாருக்கு?

யார் வெற்றிபெறுவது என்பதில் மட்டுமல்ல, அதிமுக போட்டியிடாத வேளையில், அதிமுகவின் வாக்குகளை யார் கைப்பற்றுவது என்பதிலும் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. காரணம், விக்கிரவாண்டி அதிமுகவுக்கு நல்ல வாக்குவங்கி உள்ள தொகுதி. இதுவரைக்கும் நான்குமுறை தேர்தல் நடைபெற்றிருக்கும் வேளையில், ஒருமுறை அதிமுகவும், ஒருமுறை அதிமுக கூட்டணிக் கட்சியும் வெற்றி பெற்றிருக்கின்றன.

அதுமட்டுமல்ல, 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச்செல்வன், 84,157 வாக்குகள் பெற்றார். நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, இந்த விக்கிரவாண்டி தொகுதியில், அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் பெற்ற வாக்குகள் 65,365. ஏறக்குறைய வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக்கூடிய வாக்குகளாக அதிமுக வாக்குகள் மாறியிருக்கின்றன. அதனால், இந்த வாக்குகளைப் பெற திமுக, பாமக, நாதக என மூன்று கட்சிகளும் முட்டி மோதி வருகின்றன.

admk
admkpt web

சீமான், நேரடியாகவே விக்கிரவாண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடைகளில், அதிமுக, தேமுதிக தொண்டர்களிடமும் தலைவர்களிடமும் ஆதரவு கேட்டு வருகிறார். “2009, 2011 உள்ளிட்ட தேர்தல்களில் எந்த பிரதிபலனும் பாராமல் உங்களுக்காக நான் வேலை செய்திருக்கிறேன்... அதனால், இந்தமுறை எங்களுக்கு ஆதரவு தரவேண்டும்” என கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார் சீமான்.

அதிமுக எம்.எல்.ஏக்களை சட்டசபையில் இடைநீக்கம் செய்ததைக் கண்டித்திருப்பதோடு, அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் முழு ஆதரவையும் தெரிவித்தார். கூடுதலாக, இராவணன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட நாம் தமிழர் நிர்வாகிகள், அதிமுகவினர் உண்ணாவிரதம் இருக்கும் இராஜரத்தினம் மைதானத்துக்கு நேரில் சென்று தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.

ஸ்டாலின் - அன்புமணி - சீமான்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: “திராவிடத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் இடையேதான் போட்டி” - சீமான்

மறுபுறம், ``எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்ததே திமுகவை அழிக்கத்தான்... உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது’’ என பாமக தலைவர் அன்புமணி அதிமுக தொண்டர்களை நோக்கி கேள்விகளை எழுப்பி வாக்குகளைச் சேகரித்து வந்தார். தற்போது அவர், ``அன்பான அதிமுக நண்பர்களே.. உங்களுக்கு நான் ஒரே ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.. அதிமுக இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.. புறக்கணித்து இருக்கிறீர்கள். எனவே, பொது எதிரான திமுகவை வீழ்த்த அதிமுகவினர் இந்த இடைத்தேர்தலில் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும். திமுகவை வீழ்த்த தேமுதிகவினரும் பாமகவுக்கு வாக்களிக்க வண்டும்’’ என அதிமுக, தேமுதிக தொண்டர்களிடம் நேரடியாகவே எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

PMK Candidate
PMK Candidatejpt desk

நாதக, பாமக மட்டுமல்ல ஆளும் திமுகவும் அதிமுகவின் வாக்குகளைக் குறிவைத்து பிரசாரத்தை மேற்கொள்கிறது. ஆரம்பத்தில், அதிமுகவைக் கடுமையாக விமர்சித்து வந்த திமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம், “அதிமுகவை விமர்சிப்பதைத் தவிருங்கள். பாமகவை மட்டும் விமர்சியுங்கள். இந்த நேரத்தில், அதிமுகவை விமர்சித்து அந்த வாக்குகளை இழக்கவேண்டாம்” என திமுக தலைமை உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியது

தற்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, “எம்.ஜி.ஆரே திமுகவில் இருந்தவர்தான். அதனால் அதிமுகவினர் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்” என வெளிப்படையாகப் பேசிவருகிறார்.

அந்தவகையில், விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான அதிமுக வாக்குகளைக் கைப்பற்றுவது யார் என்கிற போட்டி திமுக, பாமக, நாம் தமிழர் இடையே கடுமையான போட்டியாக மாறியிருக்கிறது என்பதே கள எதார்த்தமாக இருக்கிறது.

ஆனால், அதிமுகவின் வாக்குகள் குறித்த எ.வ,வேலுவின் கருத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். தவிர, பாமக, நாம் தமிழர் கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் அதுதான் சரியாக இருக்கும் என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com