பாமக| இளைஞர் சங்கத் தலைவராக ஜி.கே.மணி மகன் மீண்டும் நியமனம்.. மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பு!
ஜிகே மணியின் மகன் தமிழ்குமரனிடம் பாமகவின் மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆணையை வழங்கினார், பாமக நிறுவனர் ராமதாஸ்.
பாமகவின் இளைஞரணி சங்கத் தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை மருத்துவர் ராமதாஸ் மீண்டும் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவரது மூத்த மகள் காந்திமதியுடன் இணைந்து நியமன கடிதத்தினையும் தமிழ்குமரனுக்கு வழங்கினார். இந்நிலையில், தமிழ்குமரனுக்கு இளைஞர் சங்கத் தலைவராக நியமன கடிதம் வழங்கியிருப்பது பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில், பாமகவில் தற்போது நடந்துவரும் உட்கட்சிப் பிரச்னைக்குக் காரணமே, இளைஞர் சங்கத் தலைவர் பதவிதான். ஆம், கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்த பாமகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸின் மகள் வழிப் பேரனான முகுந்தனை பாமகவின் மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். ஆனால் இதை எதிர்த்த நிலையில், அப்போதே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் அன்புமணி ராமதாஸ்.
இதையடுத்து, “கட்சியை உருவாக்கியவன் நான். வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். முடிவை நான்தான் எடுப்பேன்; நான் எடுத்த முடிவுதான் கட்சியின் முடிவு. விருப்பம் இல்லாதவர்கள் யாராகினும் கட்சியிலிருந்து வெளியேறலாம்” என அன்புமணிக்கு பதிலளித்தார் ராமதாஸ். இதைத்தொடர்ந்து, “பனையூரில் புதிதாக கட்டியுள்ள எனது அலுவலகத்தில் இனி தொண்டர்கள் என்னை சந்திக்கலாம்” எனக் கூறினார் அன்புமணி. அதைத் தொடர்ந்து சில மாதங்களிலேயே தனது இளைஞர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் முகுந்தன். இவ்வாறு, பாமகவில் நடந்து வரும் தந்தை - மகன் இடையேயான பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே பாமக இளைஞர் சங்க பதவி நியமனம்தான்.
இந்நிலையில்தான் பாமகவின் இளைஞரணி சங்கத் தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை மருத்துவர் ராமதாஸ் நியமனம் செய்து மூத்த மகளுடன் இணைந்து நியமன கடிதத்தினை வழங்கியுள்ளார். தொடர்ந்து, தைலாபுரம் இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ”இன்றைய தினம் மகிழ்ச்சியான நாள். நீண்டநாள் ஆசை நிறைவேறப் போகும் நாள். தான் அதிகம் நேசிக்கும் பிள்ளைகளில் தமிழ்குமரனை பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமனம் செய்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சியினர் தமிழ்குமரனுக்கு பேராதரவு தரவேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்குமரனுக்கு ஏற்கெனவே பாமக இளைஞரணி சங்கத் தலைவர் பணி நியமனக் கடிதம் கொடுக்கப்பட்டது. அப்போது வானூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட இருந்த வேளையில், அக்கூட்டத்திற்கு தமிழ்குமரன் வர கூடாதென தொலைபேசியில் அழைப்பு வந்ததின் பேரில், அவரை வர வேண்டாம் என மனவருத்தத்தோடு தமிழ்குமரனிடம் கூறினேன். பின்னர் கடிதத்தினை கிழித்துப் போடக் கூறிவிட்டேன். மீண்டும் ஒரு பொதுக்குழு வானூர் அருகே கூடியபோது அன்புமணி சகோதரியின் மகன் முகுந்தனுக்கு இளைம்ஞர் சங்கத் தலைவராக அறிவித்தபோது மைக் தன்மீது பாய்ந்தது” என அன்புமணி ராமதாஸை மறைமுகமாக சுட்டிக்காட்டிப் பேசினார்.
யார் இந்த தமிழ்குமரன்?
பாமகவின் கௌரவத் தலைவராக உள்ள ஜி.கே.மணியின் மகனான இவர். ’லைகா’ திரைப்பட தயாரிப்ப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும் இருக்கிறார். தொடர்ந்து, சேரனின் இயக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறாக உருவாகிவரும் “அய்யா” என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக நியமிக்கப்பட்டதால், காலியாக இருந்த மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தார் தமிழ்குமரன். தொடர்ந்து மூன்று மாதங்களில் விலகியும் இருந்தார். இந்தநிலையில் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை பாமகவின் மாநில இளைஞர் சங்கப் பதவியில் ராமதாஸ் அமர்த்தியிருப்பது என்ன வியூகம் அமையப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- பிரேம்குமார்.சீ