ராமதாஸை காண புறப்பட்ட அன்புமணி... முகுந்தன் எடுத்த திடீர் முடிவு! என்ன நடக்கிறது பாமக-வில்?
விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் ராமதாஸ், அன்புமணி இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இதன் பின்னணியில் பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸின் மகள் வழி பேரன் முகுந்தனை நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்ததற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது அமைந்துள்ளது.
இந்த கருத்து மோதலில், ‘கட்சியை உருவாக்கியவன் நான், வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். எனவே முடிவை நான்தான் எடுப்பேன்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவிக்க..
"கட்சியில் சேர்ந்த 4 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுப்பது என்ன நியாயம்? அவருக்கு என்ன அனுபவம் இருக்கும், களத்தில் இருத்து வேலை செய்வதற்கு?" என்று அன்புமணியும் பதிலுக்கு பேச இறுதியில் வார்த்தை போராகவே மாறியது. இந்த சம்பவம் பாமக நிர்வாகிகளிடத்தில் கடும் அதிப்தியை ஏற்படுத்தியது.
தந்தைக்கு மகனுக்கும் இடையேயான இந்த கருத்துமோதல் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று மூத்த நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், இன்று தைலாப்புரத்திலுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை சந்திப்பதற்காக அன்புமணி பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து புறப்புட்டுள்ளார்.
அக்கா மகனான முகுந்தனுக்கு பாமக இளைஞரணித் தலைவர் பதவி கொடுத்தற்கு அன்புமணி நேற்று எதிர்ப்பு தெரிவித்தநிலையில், இன்று ராமதாஸை காண அன்புமணி சென்றிருப்பது இருவருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்துவமா? என்று பாமகவினர் எதிர்ப்பார்த்திருக்கிறார்கள்.
இந்தநிலையில்தான், பாமக ஊடகப்பேரவை இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பாமக இளைஞரணித் தலைவர் பதவியும் வேண்டாம் என்றும், கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே தொடர முகுந்தன் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.