ராமதாஸின் பயோபிக்கான `அய்யா’.. போஸ்டரில் ’1987’.. எந்தப் போராட்டத்தைப் பேசுகிறது?
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் பிறந்தநாளான இன்று அவரின் பயோபிக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.. இயக்குநர் சேரன் இயக்கத்தில், நடிகர் ஆரியின் நடிப்பில் ‘’ அய்யா’’ என்கிற பெயரில் திரைப்படமாக வெளியாகவிருக்கிறது.. ராமதாஸின் ஆரம்பகால போராட்ட வாழ்வு குறித்து இந்தத் திரைப்படம் பேசுவதாகத் தெரிகிறது.
’அய்யா’ என்ற பெயரில் பயோபிக்..
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, கீழ்சிவரி என்னும் கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் ஐந்து குழந்தைகளில் ஒருவராக 1939-ம் ஆண்டு பிறந்த மருத்துவர் ராமதாஸுக்கு இன்று 87-வது பிறந்தநாள்.. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் பயோபிக் திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது..
பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகனும் லைக்கா நிறுவனத்தின் சி.இ.ஓவுமான தமிழ்க்குமரன் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.. பாரதி கண்ணம்மா, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட தமிழின் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கிய சேரன் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார்.. இதற்காக கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவர் ராமதாசை சந்தித்துப் பேசி வந்தார். அவர் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள், போராட்டங்களைத் தொகுத்து திரைக்கதையாக மாற்றியிருக்கிறார் சேரன்.
நடிகர் ஆரி மருத்துவர் ராமதாஸாக நடிக்கிறார்.. அய்யா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள் இன்று வெளியாகின.. அதில், இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு, 1987 என்ற கருப்பொருளுடன் இந்தத் திரைப்படம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்தவகையில், 1987-ல் நடந்த வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் படத்தின் மையமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.. அந்தப் போராட்டம் குறித்துப் பார்ப்போம்..
1987 எதைக் குறிக்கிறது?
தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் தொகையைக் கொண்ட சமூகங்களில் ஒன்றான வன்னிய சமூகம் 1989 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தான் இருந்தது. மொத்தமுள்ள 50% இட ஒதுக்கீட்டில் தங்கள் சமூக மக்கள் வெறும் 1% பலன்களை தான் அனுபவிக்கிறார்கள்.. ஏற்கனவே சமூக பொருளாதார ரீதியாக முன்னேறிய சமூகங்களுடன் போட்டியிட முடியவில்லை, அது நியாயமும் இல்லை. அதனால் எங்கள் சமூகத்துக்கு எங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல்வேறு வன்னிய அமைப்புகள் போராடின. அப்படி போராடிய அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து வன்னியர் சங்கமாக 1980-ல் மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார்..
சங்கம் தொடங்கி ஏழு ஆண்டுகள் தனி இட ஒதுக்கீட்டுக்காகப் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.., தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டபோதும் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் 21ஆம் தேதி வரை நடத்தப்பட்ட தொடர் சாலை மறியல் போராட்டம் மிகப்பெரிய அளவில் பேசுப்பொருளானது. ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்த்தது, துணை ராணுவம் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, அதில் 21 பேர் பலியானார்கள்.
அதற்குப் பிறகும் ஒரு சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் உடன் அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்தின.. ஆனால் ஒரு மாதத்தில் அவர் மரணத்தை தழுவ தற்காலிக முதல்வர் ஜானகியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கவர்னர் அலெக்சாண்டரிடம் கோரிக்கை, பிரதமர் ராஜீவ் காந்தியிடம் கோரிக்கை, குடியரசுத் தலைவரான ஆர் வெங்கட்ராமனிடம் கோரிக்கை என தொடர்ச்சியான முயற்சிகளிலும் எதுவும் நடக்கவில்லை..
1989 இல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான கருணாநிதி வன்னிய சமூகத்துடன் சேர்த்து 108 சமூகங்களுக்கு பிற்படுத்தப்பட்டமக்களுக்கான மொத்த இட ஒதுக்கீட்டுக்கான 50% என்பதை தனியாக 20% பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என தனிப்பிரிவை உருவாக்கினார்..,அதற்குப் பிறகு, ஜூலை 16-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியையும் உருவாக்கினார் மருத்துவர் ராமதாஸ்..
ராமதாஸின் பயோபிக்கான அய்யா பல விஷயங்கள் குறித்துப் பேசினாலும், இந்த இட ஒதுக்கீட்டுப் போராட்டமே திரைக்கதையின் கருவாக இருக்கும் என்று தெரிகிறது..,