யானை வழித்தடம்.. “ஊரைவிட்டு காலிசெய்யும் நிலையை அரசு திட்டமிட்டு செய்கிறது” - மக்கள்

வனத்தின் பேருயிரான யானைகளை பாதுகாக்கும் நோக்கில், அவற்றின் வழித்தடங்கள் குறித்த திட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு... இந்த வரைவு அறிக்கை விஞ்ஞானப்பூர்வமாக இல்லாமல், உருவாக்கப்பட்டிருப்பதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
யானை வழித்தடம்
யானை வழித்தடம்pt web

செய்தியாளர் மகேஸ்வரன்

யானை வழித்தட அறிக்கை

மேகக்கூட்டங்களின் இடையே பறந்தபடி கீழே பார்க்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்... வெண்மேகங்களை விலக்கிக் கொண்டு பயணித்தால், பார்ப்பதெல்லாம் பசுமையான காடுகள்... அடர்த்தியாக மரங்கள் வளர்ந்துள்ள வனப்பகுதிகள்... இடையிடையே சில கிராமங்கள்... இப்படி இருந்தால், அதுதான் நீலகிரி மாவட்டம்.

இந்த வனவளத்துக்கு காரணம் என்னவென கேட்டால், சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் யானைகள்தான் என்று...

யானைகளை பாதுகாக்க வேண்டுமென்றால், அவற்றின் வழித்தடங்களை பாதுகாத்தாக வேண்டும். 2023 ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் மொத்தம் 20 யானை வழித்தடம் உள்ளதென அறிவித்தது வனத்துறை. அடுத்தகட்டமாக, யானை வழித்தடங்கள் பற்றி ஆய்வு செய்ய, அமைக்கப்பட்ட திட்ட வல்லுநர் குழு, கள ஆய்வு மற்றும் நில அளவைகளை மேற்கொண்டு, அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 42 யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று, நீலகிரி மாவட்டத்தில் உள்ளன.

யானை வழித்தடங்கள் பற்றி, கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி, ஆங்கிலத்தில் 161 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்ட வனத்துறை, இதுபற்றி மக்கள் கருத்து கூறுவதற்காக, ஒரு மின்னஞ்சலையும் வெளியிட்டது. இதில், ஏற்கனவே வரைவு அறிக்கையில் இடம்பெற்றிருந்த சீகூர் யானை வழித்தடமும் இடம்பெற்றுள்ளது. மேலும், போஸ்பரா - நிலம்பூர் மற்றும் ஓவேலி ஆகிய வழித்தடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த 3 வழித்தடங்களும் மக்கள் வாழும் பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது.

யானை வழித்தடம்
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

யானை வழித்தட அறிக்கை; சிக்கலில் ஏகப்பட்ட கிராமங்கள்

குறிப்பாக, சீகூர் வழித்தடம், நீலகிரி வடக்கு டிவிஷன் வனத்தில் தொடங்கி, பொக்காபுரம், மாவநல்லா, வாழைத்தோட்டம், ஆனைக்கட்டி வழியே பயணித்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தெங்குமரஹாடா கடந்து, தருமபுரி வனப்பகுதி வரை நீள்கிறது... அதாவது, மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளை இணைக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்களையும் இணைக்கிறது. இதில், நீலகிரி மாவட்டத்தில், பன்னெடுங்காலமாக மக்கள் வசிக்கும் மசினகுடி, பொக்காபுரம், மாவநல்லா உள்ளிட்ட 8 கிராமங்கள், அதில் 513 குடியிருப்புகள் உள்ளன.

போஸ்பெரா - நிலம்பூர் வழித்தடத்தில் 7 கிராமங்கள், 43,796 குடியிருப்புகள், ஓவேலி யானைகள் வழித்தடத்தில் 31 கிராமங்கள், 2547 குடியிருப்புகள் உள்ளன. தேயிலைத் தோட்டங்களும், விளைநிலங்களும் ஏராளமாக உள்ளன. இவற்றால் யானைகள் வழித்தடங்களுக்கு இடையூறு என்கிறது வரைவு அறிக்கை. இதனால் பல தலைமுறைகளாக வசிக்கும் மக்கள், ஊரையே காலி செய்யும் நிலை உருவாகும் என நீலகிரி மாவட்ட மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

யானை வழித்தடம்
முதலமைச்சரின் 'இலவச மருத்துவ காப்பீடு அட்டை'யின் முழு பயன்கள்!

ஒவ்வொன்றுக்குமே கட்டுப்பாடுகள்

ஓவேலியைச் சேர்ந்த ஆனந்தராஜா கூறுகையில், “ஓவேலி எனும் பேரூராட்சியில், ஏற்கனவே வனத்திற்கான பல்வேறு தடைச் சட்டங்கள் உள்ளன. குறிப்பாக 2012 ஆம் ஆண்டு அரசு 11,205 ஏக்கரை வனமாக மாற்றியுள்ளது. 53 ஏ என சொல்லி, 16ஏ என கொண்டு போய் முழுக்க முழுக்க காப்புக் காடுகளாக அறிவித்துள்ளது. எஞ்சி இருக்கும் பகுதிகளில் 2 யானை வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது முழுமையாக நடைமுறைப்படுத்தும் போது அங்கிருக்கும் ஏழை எளிய மக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு ஊரைவிட்டு காலி செய்யக்கூடிய நிலை ஏற்படலாம். இந்த அரசு அதை திட்டமிட்டு செய்கிறது” என தெரிவித்துள்ளார்.

கோவை, ஓசூர், சத்தியமங்கலம் மற்றும் கூடலூரில் யானை - மனித மோதல்களை தடுக்க, யானை வழித்தடங்களை மீட்டெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறது வரைவு அறிக்கை... 2008 முதல் 2023 ஆம் ஆண்டு வரை, 12 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், காட்டு யானைகள் தாக்கி 21 மனித உயிரிழப்புகள் நேரிட்டுள்ளதாகவும் கூறுகிறது... யானைகள் வழித்தடத் திட்டம் அமலுக்கு வந்தால், நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொன்றுக்குமே கட்டுப்பாடுகள் வந்துவிடும் என்கிறார்கள் அந்த மாவட்ட மக்கள்.

ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ள யானை வழித்தட திட்ட வரைவு அறிக்கையை, தமிழில் வெளியிட வேண்டும் என்பது நீலகிரி மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள மக்களின் கருத்துகளை, முழுமையாக கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

யானை வழித்தடம்
காஞ்சிபுரம்: நீதிமன்ற உத்தரவை மீறி பிரபந்தம் பாடுவதா? - வடகலை தென்கலை பிரிவினரிடையே வாக்குவாதம்

வரைவு அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்

மசினக்குடியைச் சேர்ந்த வர்கீஸ் என்பவர் கூறுகையில், “விவசாயிகள் விவசாயம் செய்யக்கூடாது, பழங்குடி மக்கள் வனப்பொருட்களை எடுக்கக்கூடாது, மாடு மேய்க்ககூடாது என்றால் எந்த விவசாயியும் பழங்குடி மக்களும் இங்கு வாழ முடியாது. அப்படிப்பட்ட நெருக்கடியை உருவாக்கி மிகப்பெரிய கலவரத்தை தூண்டும் செயலாகத்தான் இதைப் பார்க்கிறோம். எனவே இந்த வரைவு அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். வன உரிமைச் சட்டப்படி தனிமனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும். கிராம சபைகளின் ஒப்புதல் பெற்று வழித்தடம் வரையறை செய்ய வேண்டும்” என தெரிவிக்கின்றார்.

இந்த பூமியில் வாழ, வனவிலங்குகள் உள்பட ஒவ்வொரு உயிருக்குமே சம உரிமை உள்ளது. இதை மறுத்துவிட முடியாது. யானை வழித்தடத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் கடிவாளம் கட்டிய குதிரை போல முன்செல்லாமல், காலங்காலமாக குடியிருக்கும் தங்களின் கருத்துகளை அறிந்த பின்பே முடிவெடுக்க வேண்டும் என்பது நீலகிரி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

யானை வழித்தடம்
திருச்சூர்: செவிலியரின் அலட்சியத்தால் நடக்கமுடியாமல் போன குழந்தை; நீதி கேட்கும் தந்தை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com