”அன்று கலைஞர் கருணாநிதி சொன்னதை இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஏற்கணும்” - சென்னையில் பவன் கல்யாண் பேச்சு!
சென்னையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ கருத்தரங்கம் திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசிய ஜன சேனா கட்சி தலைவரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், ”நான் தமிழகத்தில் வாழ்ந்துள்ளேன். தமிழகத்தைவிட்டு பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்றுவிட்டேன். நான் தமிழ்நாட்டைவிட்டுப் போய் இருக்கலாம். ஆனால், தமிழ்நாடு என்னைவிட்டுச் செல்லவில்லை. தமிழ்நாடு மீதான தாக்கம் ஆழமானது. அதன்மீது அதிகம் மதிப்பு வைத்துள்ளேன்.
தமிழ்நாடு திருவள்ளுவர் பூமி. பாரதியாரை மிகவும் பிடிக்கும். நான் வணங்கும் கடவுள் முருகன். எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் அவர்கள் வாழ்ந்த பூமி இது. தமிழகம் எனக்கு கற்றுத் தந்தது; எனக்கு வழிக்காட்டியாக இருந்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
எதிர்கட்சி வெற்றி பெற்றால் Evm இயந்திரம் சிறந்தது என்பார்கள். தோற்றால் Evm வைத்து ஏமாற்றுகிறார்கள் என்பார்கள். அவர்கள் காலத்தில், ’ஒரே நாடு ஒரே தேர்தல் சூப்பர். இப்போது கொண்டுவந்தால் மோசம். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து இரட்டை வேடம் போடுகிறார்கள். தமிழில் ஒரு பழமொழி உள்ளது. ’மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்’ என்பது போல உள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே ஒரேதேர்தலை வரவேற்றுள்ளார். ஒரே தேர்தல் குறித்து தனது ’நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதனை ஸ்டாலின் தெளிவாக படிக்க வேண்டும். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நமக்கு செலவு மிச்சமாகும். அரசியலுக்காக சிலர் இதனை எதிர்க்கின்றனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ஒரே நாடு ஒரே தேர்தலால் நமது ஜிடிபி நிச்சயம் உயரும் என்று பரிந்துரைத்துள்ளார்கள். ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது புரிதலை மாற்றிக்கொள்ள வேண்டும். அரசியல் சீர்திருத்தம் மட்டுமல்ல, பொருளாதார சீர்திருத்தம். முக்கியமாக நமது தமிழ்நாட்டிற்குத் தேவையான சீர்திருத்தம். ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ காலத்தின் கட்டாயம்” எனத் தெரிவித்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த பவன் கல்யாண், “தமிழ்நாடு முதலமைச்சர் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கருணாநிதி ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டுமென்று சொல்லியதை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். நாடு முழுவதும் ஏதோ ஒரு பகுதியில் தேர்தல் மாறிமாறி நடந்து வந்தால், நாட்டின் வளர்ச்சியும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியும் - வளர்ச்சி பணிகளும் தொடர்ந்து தடைபடுகிறது. எனவே நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் தேவை. பொருட்செலவு, நேரம் செலவு.. இவை அனைத்தும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும் அவரிடம், தமிழகத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்துள்ள பற்றிய கேள்விக்கு ”NDA கூட்டணி இந்த தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெறும். நான் அரசியலில் 15 ஆண்டுகாலமாக இருந்து வருகிறேன். அரசியல் என்பது கடுமையான களம். ஒரு நடிகராக இருப்பது என்பது வேறு. அதேநேரத்தில் தீவிர அரசியல் இறங்குவது என்பது வேறு. எனக்கு தெரியவில்லை விஜயின் அரசியல் எப்படி இருக்கப்போகிறது என்று” என்றார். தொடர்ந்து, “தமிழ்நாட்டில் ஜன சேனா கட்சியை நிறுவ முயற்சி நடக்கிறதா” என்ற கேள்விக்கு, “தீவிர அரசியல் செய்யக்கூடிய ஆட்கள் இருந்தால் மட்டுமே அரசியலில் சாத்தியப்படும். இப்போதைக்கு அதுபோல எந்த ஒரு எண்ணமும் தனக்கு இல்லை” என்றார்.
“தொகுதி மறு சீரமைப்பு கூட்டத்திற்க்கு உங்கள் MP வந்து பாதியிலே புறப்பட்டது ஏன்” என்ற கேள்விக்கு, “நமக்கு பிடிக்கிறதோ, பிடிக்கலையோ எனக்கு தனிப்பட்ட முறையில் அவர்கள் அழைப்பு விடுத்ததால். இதில் எங்களுக்கு விருப்பமில்லை என்பதை சொல்வதற்காக எங்கள் நாடாளுமன்ற உறுப்பினரை அனுப்பிவைத்து தெரிவித்தேன்” என்றார். மேலும் அவரிடம், ”விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து இருக்கிறாரே? அவருக்கு உங்களது ஆலோசனை என்ன? அவர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா” என்ற கேள்விக்கு, “நண்பர் விஜய்க்கு நான் எனது வாழ்த்துகளைச் சொல்கிறேன். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு கட்சியை ஆரம்பித்து அது எப்படி நடக்கணும் என்று முடிவு செய்வது அது அந்த கட்சியின் தலைவர் பொறுப்பு. அவருடைய முடிவும்கூட. கூட்டணிக்கு வருவார்களா என்பது எனக்கு தெரியவில்லை இதுவரைக்கும் அப்படி எந்த ஒரு பேச்சும் நடக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து “இந்த பூமி சனாதன பூமி - சனாதான தர்மம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆந்திராவில் ராமர் இல்லாத ஊர் இருக்காது. தமிழ்நாட்டில் பிள்ளையார் இல்லாத தெரு இருக்காது. நாடு முழுவதும் நம்முடைய கலாசாரத்தில் சனாதான தர்மம் இணைந்திருக்கிறது. யாரோ சிலர் தேவை இல்லாமல், தொடர்ச்சியாக சனாதன தர்மத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்கள் கிறிஸ்தவத்தின் மீது இஸ்லாமியத்தின் மீதோ செய்வது கிடையாது. ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக இந்து மதம் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அப்படி அவர்கள் செய்வது தவறு என்பதை நாம் சொல்லித்தான் ஆக வேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன். நான் இங்கேதான் படித்தேன். யாரும் என்னை கட்டாயப்படுத்தி தமிழைப் படிக்க வைக்கவில்லை. நான் தமிழை காதலித்ததால் அதை நான் படித்தேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு நான் இங்கே வந்த பிறகும், தமிழை மீண்டும் என்னால் பேச முடிகிறது. மொழி இங்கே திணிக்கப்பட முடியாது. புதிய கல்விக் கொள்கை என்ன சொல்கிறது என்றால், ஸ்பானிஷ் மொழி பிரஞ்சு மொழிக்கு பதிலாக நாம் ஏன் நம்முடைய நாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாது? ஏனென்றால், அவை தினம்தினம் நம்முடைய கலந்துரையாடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொழில் செய்வதற்கு அது பயன்படும்” என்றார்