இந்தி திணிப்பு விவகாரம் | ”புரிதல் இல்லாமல் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேனா?” - பவன் கல்யாண் விளக்கம்
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜனசேனா கட்சியின் 12ஆவது தொடக்க விழாவில் பேசிய ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண், ”பல மொழிகள் நாட்டிற்கு நல்லது. தமிழ்நாட்டிற்கும் இந்த கொள்கை பொருந்தும். மொழிகளுக்கு எதிராக வெறுப்புணர்வை வளர்ப்பது விவேகமற்றது. இந்தியை எதிர்ப்பவர்கள், லாபத்திற்காக திரைப்படத்தை இந்தியில் மொழி மாற்றம் செய்வது ஏன்” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது. குறிப்பாக, பவன் கல்யாண் கருத்துக்கு திமுக பதிலடி கொடுத்து வருகிறது. திமுகவின் மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், ”தாய்மொழியில் கல்வி கற்பதுதான் மக்களுக்கு பயிற்சி அளிக்க சிறந்த வழி என்று நாங்கள் கருதுவதால், நாங்கள் இந்தியை எதிர்ப்பது இது முதல்முறை அல்ல. பாஜக அரசிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பெறுவதற்காக அவர் (பவன் கல்யாண்) பாஜகவை ஆதரிக்க விரும்புகிறார்" எனப் பதிலடி கொடுத்திருந்தார். அதேபோல் நடிகர் பிரகாஷ் ராஜும் கடுமையான எதிர்வினையாற்றியிருந்தார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக பவன் கல்யாண், தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ஒரு மொழியை வலுக்கட்டாயமாகத் திணிப்பதோ அல்லது ஒரு மொழியை குருட்டுத்தனமாக எதிர்ப்பதோ இரண்டும் நமது பாரதத்தின் தேசிய மற்றும் கலாசார ஒருங்கிணைப்பின் நோக்கத்தை அடைய உதவாது. இந்தி மொழியை ஒரு மொழியாக நான் ஒருபோதும் எதிர்த்ததில்லை. அதை கட்டாயமாக்குவதை மட்டுமே நான் எதிர்த்தேன்.
NEP 2020தானே, இந்தியை திணிக்காதபோது, அதன் திணிப்பு குறித்து தவறான கதைகளைப் பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியைத் தவிர வேறில்லை. NEP 2020இன்படி, மாணவர்கள் ஒரு வெளிநாட்டு மொழியுடன் எந்த இரண்டு இந்திய மொழிகளையும் (அவர்களின் தாய்மொழி உட்பட) கற்றுக்கொள்ள நெகிழ்வுத்தன்மை கொண்டுள்ளனர்.
அவர்கள் இந்தி படிக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, அஸ்ஸாமி, காஷ்மீரி, ஒடியா, பெங்காலி, பஞ்சாபி, சிந்தி, போடோ, டோக்ரி, கொங்கனி, மைதிலி, மெய்தி, நேபாளி, சந்தாலி, உருது அல்லது வேறு எந்த இந்திய மொழியையும் தேர்வு செய்யலாம்.
பல மொழிக் கொள்கை மாணவர்களுக்கு விருப்பத்தேர்வை வழங்கவும், தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கவும், இந்தியாவின் வளமான மொழியியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக தவறாகப் புரிந்துகொண்டு, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகக் கூறுவது புரிதலின்மையையே பிரதிபலிக்கிறது” என அதில் தெரிவித்துள்ளார்.