\
CM vijay
CM vijayANI

விஜய்க்கு எதிராக ஒன்றிணைந்த கட்சிகள்! நிறைவேறுமா தலைமைச் செயலக கனவு? என்ன செய்யப் போகிறார் விஜய்?

1,200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
Published on

தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலகம் வேண்டும் என்பது பல ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கை... இதற்காக ஏற்கனவே பல அறிவிப்புகளும், கட்டுமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. ஆனால், புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் மட்டும் இதுவரை முழுமையாக நிறைவேறவில்லை. இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் பொது சுமார் 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, பட்டினப்பாக்கத்தில் உள்ள ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதி தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால், அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, மீனவ அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

2021 Tamil Nadu Election: DMK Returned to Power After 10 Years
தலைமைச் செயலகம்Pt web

இத்திட்டத்தை விமர்சித்திருக்கும் திமுக கனிமொழி, எதை கேட்டாலும் நிதி இல்லை என்று கூறும் ஆட்சியாளர்கள், மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதற்கான அனைத்து வழிகளையும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இருக்கின்ற சட்டமன்றத்தில் இருந்து முதலில் ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும். அதன்பிறகு புதிய சட்டமன்றத்தைப் பற்றி அவர்கள் சிந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் விவசாயிகள் பிரச்னை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்னைகள் என பல்வேறு சவால்கள் இருக்கும் நிலையில், நிதி நெருக்கடியும், கடன் சுமையும் உள்ள சூழலில் 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது என எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.

CM vijay
இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீவிர ஆலோசனை!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலகம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும், ஆனால் அது பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என்றால், அது தொலைநோக்குப் பார்வையற்ற முடிவாக இருக்கும். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்னையாக மாறும் என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இந்தத் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது செயல்பட்டு வரும் தலைமைச் செயலகத்தில் என்ன பிரச்னை உள்ளது என்றும், புதிய கட்டடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாட்டின் புதிய நாடாளுமன்றமே ரூ.900 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், புதிய தலைமைச் செயலகம் ரூ.1,200 கோடியில் கட்டப்படும் என அறிவித்தது கள யதார்த்தத்துக்கு சற்றும் பொருந்தாதது எனவும் கிண்டியில் 35 ஏக்கர் மாற்று நிலம் இருந்தும், முதல்வர் விஜய்யின் வீட்டிற்கு அருகில் கட்ட வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சித்திருக்கிறார்.

Kanimozhi Defends Jailed DMK MLA Markandeyan
விஜய் - கனிமொழிPt web

இந்நிலையில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளும் தவெகாவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளுமே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய CPM கட்சியின் செயலாளர் சண்முகமும், இதுபோன்ற முக்கியமான விவகாரங்களில் அரசு அவசரமாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்றும், பட்டினப்பாக்கத்தைச் சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், அவர்களின் குரலுக்கும் அரசு செவி சாய்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், இந்த விவகாரத்தை பல்வேறு கோணங்களில் அணுக வேண்டும் என்றும், தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் உண்மையில் யார் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஆராய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவனும் அங்குள்ள மக்களிடம் கருது கேட்ட பின் அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என பேசி இருக்கிறார்.

இதற்கிடையே, மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கடலோரப் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கக் கூடாது என்றும், அதற்கு மாற்றாக வேறு இடத்தை அரசு உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என்று கூறி இந்தத் திட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

ஒருபுறம் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை.. மறுபுறம் பட்டினப்பாக்கத்தில் அமைப்பதற்கு தமிழகத்தின் அணைத்து கட்சிகளும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. இதனால் புதிய தலைமைச் செயலக திட்டம் தற்போது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு அரசு செவி சாய்க்குமா அல்லது தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com