மாம்பழத்தை நெருங்கும் திமுக.. NDA கூட்டணியை உடைக்க மாஸ்டர் ப்ளான்.. என்ன நடக்கிறது?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மாம்பழம் கட்சியை வெளியே கொண்டுவர திமுக திட்டம் தீட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு வலுசேர்க்கும் வகையில் ஆழமான 3 காரணங்களும் இருக்கின்றன. நடப்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்திற்கு சென்ற செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசி இருக்கிறார். அவரோடு அக்கட்சியின் மாநில துணை தலைவர் விஜயனும் ராமதாஸை சந்தித்து பேசி இருக்கிறார். அரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, பொதுவாழ்க்கையில் 40 வருடமாக உள்ள ராமதாசை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாகவும், அரசியலுக்காக சந்திக்கவில்லை.. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு என்று கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமகவையும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர திமுக திட்டமிடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆம், சமீப நாட்களாக பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் போக்கு நீடிக்கும் நிலையில், நிறுவனர் ராமதாஸின் கூட்டணி தேர்வு திமுகவை நோக்கியே இருப்பதாக கூறப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலின்போதே அதிமுகவோடு கூட்டணி செல்ல ஆசைப்பட்டதாக தெரிவித்திருந்தார் ராமதாஸ். இதற்கு வலு சேர்க்கும் விதமாக, சமீப நாட்களாக ஆளும் திமுக அரசு எந்தவிதமான காட்டமான விமர்சனங்களை முன்வைக்காத ராமதாஸ், ஒருவித மென்மையான போக்கையே கடைபிடிக்கிறார்.
முன்னதாக, நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்த அன்புமணி, பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு திமுகதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்த ஸ்டாலினின் கண் பட்டுதான் இப்படி நடப்பதாகவும், மோதலுக்கு காரணமே திமுகதான் என்று கூறி இருந்தார் அன்புமணி. ஆனால், கடந்த 19ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பாமகவில் நிலவும் குழப்பத்திற்கு தி.மு.க காரணம் இல்லை என்றவர், அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய், கடைந்தெடுத்த பொய்.. எல்லாம் போக போக தெரியும் என்று கூறி இருந்தார்.
அடுத்தகட்டமாக, சாகும் வரை கலைஞர் அரசியலில் ஈடுபட்டதுபோல தானும் அரசியலில் இருப்பேன் என்றும் கூறியிருந்தார் ராமதாஸ். தொடர்ந்து, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “கலைஞர் கருணாநிதி பாணியில் பாமகவின் தலைவராக இறுதி மூச்சு வரை நான்தான் செயல்படுவேன்.. ஸ்டாலின் பாணியில் அன்புமணி செயல் தலைவராக செயல்பட வேண்டும்.. கலைஞர் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் தரப்பில் இருந்து ஒரு முணுமுணுப்பு கூட வரவில்லை.. என்று கூறியிருந்தார்.
இதன் தொடர் நிகழ்வாகவே, ராமதாஸ் உடனான செல்வப்பெருந்தகையின் சந்திப்பு பேசுபொருளாக மாறி இருக்கிறது. அரசியல் எதுவும் பேசவில்லை என்று செல்வப்பெருந்தகை மறுத்தாலும், கூட்டணி கட்சியான காங்கிரஸை வைத்து பாமகவை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க திமுக முயற்சி செய்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே வலிமையாக இருக்கும் கூட்டணியை மேலும் வலிமைப்படுத்த பாமகவையும் உள்ளே கொண்டுவர திமுக நினைக்கிறதா என்ற கேள்விக்கு, மேற்கூறிய காரணங்கள் எல்லாம் வலு சேர்க்கும் நிலையில், நடப்பவை குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.