தவெக தலைவர் விஜய் - பரந்தூர் விமான நிலையம்
தவெக தலைவர் விஜய் - பரந்தூர் விமான நிலையம்புதிய தலைமுறை

பரந்தூர் விமான நிலையம்: எதிர்ப்பு ஏன்? அரசு சொல்வதென்ன? 900+ நாட்களாக தொடரும் போராட்டத்தின் பின்னணி!

பரந்தூர் விமான நிலைய திட்டம் என்பது என்ன, இந்த திட்டம் சொல்வது என்ன, ஏன் மக்களால் எதிர்க்கப்படுகிறது, 910 நாட்களாக தொடரும் போராட்டத்தின் பின்னணி என்ன, இதுவரை இப்போராட்டத்துக்கு யாரெல்லாம் ஆதரவு தெரிவித்துள்ளனர் போன்றவை குறித்து விரிவாக அறியலாம்....
Published on

பரந்தூரில் போராடும் மக்களை தவெக தலைவர் விஜய், இன்று நேரில் சந்திக்கிறார். இதையடுத்து பரந்தூர் விமான நிலையம் மீண்டுமொருமுறை பேசுபொருளாகி இருக்கிறது. இந்த நேரத்தில், பரந்தூர் விமான நிலைய திட்டம் என்பது என்ன, இந்த திட்டம் சொல்வது என்ன, ஏன் மக்களால் எதிர்க்கப்படுகிறது, 910 நாட்களாக தொடரும் போராட்டத்தின் பின்னணி என்ன, இதுவரை இப்போராட்டத்துக்கு யாரெல்லாம் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறித்தெல்லாம் இங்கே விரிவாக அறியலாம்....

பரந்தூர் மக்கள் போராட்டம் - விஜய்
பரந்தூர் மக்கள் போராட்டம் - விஜய்

பரந்தூர் விமான நிலைய திட்டம் - எப்போது அறிவிப்பு வந்தது?

கடந்த ஆகஸ்ட் 1, 2022-ல் நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி, சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், ‘காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூரில் அமையவிருக்கிறது’ என அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, சுமார் 20,000 கோடி ரூபாய் தோராய மதிப்பீட்டில், 4,751 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமையவிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

தவெக தலைவர் விஜய் - பரந்தூர் விமான நிலையம்
பரந்தூர்: போராட்டக்காரர்களை எங்கே சந்திக்கிறார் விஜய்? நீடித்த இழுபறி.. விதிக்கப்பட்ட 4 நிபந்தனைகள்!

இதையடுத்து “விரைவில் நிலம் கையப்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாத இந்தப் புதிய விமான நிலையம் அமைக்க, மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் மக்களின் மறுவாழ்வு, மீள்குடியேற்றத்துக்கும், கையகப்படுத்தப்படவிருக்கும் நிலங்களுக்கும் சந்தை விலையைவிடக் கூடுதலாக, மிகவும் திருப்திகரமான இழப்பீட்டை வழங்குவோம்” என அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

போலவே, “வழிகாட்டி மதிப்பு என்பது வேறு, சந்தை மதிப்பு என்பது வேறு. சந்தை மதிப்பைப் போல மூன்றரை மடங்கு இழப்பீடு தரப்படும். வீட்டில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் வேலை. விமான நிலையத்துக்கு அருகிலேயே நிலமும், வீடு கட்டுவதற்கு பணமும் தருகிறோம்” என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறினார். குறிப்பாக இந்த விமான நிலையத் திட்டத்திற்காக 13 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு இழப்பீடு வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

பரந்தூர் விமான நிலைய திட்டம் சொல்வது என்ன?

சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து 5,476 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுகிறது. இதில் சுமார் 3,200 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பு தனிநபர்களுக்குச் சொந்தமான பட்டா நிலங்களாகவும், சுமார் 1,300 ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலமாகவும் இருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில், திட்டமிடப்பட்டிருக்கும் சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையை ஒட்டி இது அமைந்திருக்கிறது.

முதல்வர் பெருமிதம்!

சுமார் 20,000 கோடி ரூபாய் உத்தேச மதிப்பீட்டில் தொடங்கப்படவிருக்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது, ‘தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான படிகட்டு, 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற குறிக்கோளை எட்டுவதற்கான மற்றொரு மைல் கல்’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 2022-ல் பெருமிதத்துடன் கூறினார்.

தவெக தலைவர் விஜய் - பரந்தூர் விமான நிலையம்
600ஆவது நாளில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டம்... மனதை உலுக்கும் காட்சிகள்!

மக்கள் எதிர்ப்பு... ஏன்?

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சுமார் ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்ற நேரிடும் என அங்கு வசிக்கும் மக்கள் கூறுகிறார்கள். காரணம், இந்த நிலத்துக்காக ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, மகாதேவி மங்கலம் ஆகிய நான்கு கிராமங்களும் முற்றிலுமாகக் கையகப்படுத்தப்பட இருக்கின்றன. மட்டுமன்றி “ஏரிகள், குளங்கள், வயல்வெளிகள், குடியிருப்புகள், பள்ளிக் கூடங்கள், கோயில்கள் போன்றவை இந்தத் திட்டத்துக்காக அழிக்கப்பட இருக்கின்றன. அரசுப் புறம்போக்கு என்று கூறப்படும் இடங்கள் அனைத்தும் நீர்நிலைகள்தான்” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

பரந்தூர் மக்கள் போராட்டம்
பரந்தூர் மக்கள் போராட்டம்

இதில் மக்கள் தரப்பை சரிகட்ட, விமான நிலையத்துக்கு நிலம் கொடுப்போருக்கு பல வகையில் இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்தது. குறிப்பாக, ‘இழப்பீட்டின்போது வழிகாட்டி மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சந்தை மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ள’ அரசு முடிவு செய்திருந்தது. இருப்பினும் மக்கள், “எங்களுக்கு விவசாயம்தான் தெரியும். பசுமையை அழித்துவிட்டு, எதற்காக பசுமை விமான நிலையம்? எங்களுக்கு தெரிந்த தொழிலை நாங்கள் செய்துகொள்கிறோம். வீடு, நிலம் இருப்பவர்களுக்கு இழப்பீடு கொடுக்கிறோம் என்கிறார்கள். இங்கே தலைமுறை தலைமுறையாக நிலமற்ற விவசாய கூலிகளின் நிலை என்ன ஆகும் என யோசித்தார்களா?” என்றார்கள் ஆவேசமாக.

நிலத்தை தொடர்ந்து கையகப்படுத்தும் அரசு...

இதற்கிடையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில்துறை அனுமதியளித்தது. இதையடுத்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்தவகையில் ஆகஸ்ட் 21, 2022-ல், பரந்தூரில் கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தியபடி போராடத் தொடங்கினர். இருப்பினும் கடந்த செப்டம்பரில், அரசு தரப்பிலிருந்து விமான நிலைய பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது. தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணைகளும் வெளியாகி வந்தன.

பரந்தூர் ஒப்பந்தப்புள்ளி
பரந்தூர் ஒப்பந்தப்புள்ளி

இதற்கான அரசாணையில், இந்த திட்டத்துக்காக 5,746.18 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், இதற்கு தனியார் பட்டா நிலம் 3,774.01 ஏக்கர் மற்றும் அரசு நிலம் 1,972.17 ஏக்கர் கையகப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாரிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல் படி, ரூ.1,822.45 கோடி இழப்பீடும் நிர்வாக செலவுடன் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது பரந்தூர் விமான நிலையத்துக்கான நில எடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தவெக தலைவர் விஜய் - பரந்தூர் விமான நிலையம்
‘இது லிஸ்ட்லயே இல்லையே!’ உலக முதலீட்டாளர் மாநாட்டின் கவனத்தை ஈர்த்த பரந்தூர் விமான நிலையத்தின் 3D!

எதிர்ப்பு ஏன்?

நிலத்தை இழந்து பாதிக்கப்படும் மக்களும் சந்தை மதிப்பைவிட மூன்றரை மடங்கு இழப்பீடு தருவதாக தமிழ்நாடு அரசு வாக்குறுதி அளித்த நிலையிலும், வாழ்வாதாரம் பறிபோவதாகக் கூறி கிராம மக்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

நீர் நிலைகள் அழிக்கப்பட்டால் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும், சென்னை வரை வெள்ள அபாயம் ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நிபுணர்களும் எச்சரிக்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில்கொண்டு, திமுக-வின் கூட்டணி கட்சிகளும் ‘நிலம் கையகப்படுத்தக்கூடாது’ என வலியுறுத்துகின்றனர்.

“வேறு இடத்தில் விமான நிலையம் கொண்டு வரலாம்...”

பாமக போன்ற சில கட்சிகள், மாற்று இடத்தை பரிந்துரை செய்கின்றன. அந்தவகையில் ஆக. 2022-ல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் நிச்சயமாகத் தேவை. அது சம்பந்தமாக நானே பல அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறேன். ஆனால், சென்னையிலேயே உப்பளம் போன்று, பல்வேறு பகுதிகளில் அரசு நிலங்களே இருக்கின்றன. அங்கெல்லாம் தேர்வு செய்யாமல் இந்த இடத்தை ஏன் தேர்வு செய்தார்கள் என்பது குறித்து நாங்கள் அமைக்கப்போகும் குழு ஆய்வு செய்த பிறகுதான் தெரியவரும்” என தெரிவித்திருந்தார். இதுபோன்ற ஆலோசனைகளை கூட அரசு மேற்கொள்ளலாம் என்று மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

அரசியல் தலைவர்கள் ஆதரவு:

கடந்த ஆகஸ்ட் 2022-ல் தொடங்கி, இன்று வரை பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 910 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்ட குழுவினரை 36 ஆவது நபராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று சந்திக்க உள்ளார்.

பரந்தூர் விமான நிலைய போராட்டக்காரர்கள் - தவெக தலைவர் விஜய்
பரந்தூர் விமான நிலைய போராட்டக்காரர்கள் - தவெக தலைவர் விஜய் புதிய தலைமுறை

இதற்கு முன், எந்தெந்த தலைவர்கள் எப்போதெல்லாம் சந்தித்தனர் என்ற விவரம், இங்கே:

1. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இரண்டு முறை போராட்டக் களத்திற்கு சென்றுள்ளார்.

  • 26-ஆக.2022. போராட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

  • 08.செப்.2022 தடையை மீறி ஏகனாபுரத்திற்கு சென்றார்.

2. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்- 19.செப்.2022

3. போராட்டக் குழுவினர் 200வது நாளாக நடத்திய போராட்ட பொதுக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் 2 முறை பங்கேற்பு - பிப் 11, 2023

4. சமூக ஆர்வலர் மேதா பட்கர் - மார்ச் 2, 2023

5. அம்மா மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்

6. அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம்

7. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்.பாலகிருஷ்ணன்

8. இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன்

9. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

10. புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி

11. தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் - மூன்றுமுறை

12. மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி

13. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு

14. பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி

15. நாம் தமிழர் செய்தி தொடர்பாளர் செந்தில்குமார்

16. இந்திய குடியரசுகட்சி அன்புவேந்தன்

17. பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்

18. நீதியரசர் அரிபரந்தாமன்

19. விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு

20. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

21. நெல்லை முபாரக்

22. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் தலைவர் பெ.சண்முகம்

23. சமூக ஆர்வலர் அருள்

24. சமூக ஆர்வலர் வெண்ணிலா

25. சமூக ஆர்வலர் சுப.உதயகுமார்

26. சமூக ஆர்வலர் குடந்தைஅரசன்

27. சமூக ஆர்வலர் முத்துக்குமார்

28. சமூக அலுவலர் சுப. தென்பாண்டியன்

29. SDPI - கரீம்

30. தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி

31. தமிழக மக்கள் கழகம் தலைவர் ஜான்பாண்டியன்

32. பாரதி பகுஜன்சமாஜ் கட்சி

33. மேனகா கோமகன்- விசிக

34. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சுந்தர்ராஜன்

35. சவுக்கு சங்கர் - இரண்டு முறை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com