பாலாறு நதிக்கரை அரசியல்.. மாற்றம் நோக்கி நகரும் இளம் தலைமுறை.. யாருக்கு சாதகம்?
கர்நாடக மாநிலத்தின் நந்தி மலையில் உற்பத்தியாகி, ஆந்திரா வழியாகத் தமிழகத்திற்குள் நுழைந்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் தாகம் தீர்க்கும் ஜீவநதியாகத் திகழ்கிறது பாலாறு. இந்த நதிக்கரையில் காணப்படும் நடுகற்களும், கல்வெட்டுகளும் தமிழரின் வீரம், வாழ்வியல், வழிபாட்டு வரலாற்றைப் பறைசாற்றுகின்றன.
1967-க்கு முன்னர் வரை காங்கிரஸ் கட்சிக்கு வலுவான அடித்தளம் கொடுத்த பகுதிகளில் முக்கியமானது இந்த வட ஆற்காடு மண்டலம். 1954இல் குடியாத்தம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுதான் முதன்முறையாக சட்டமன்றம் சென்றார் காமராஜர். ஆனால், 1967-க்குப் பின் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் மாறி மாறித் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்தி வருகின்றன.
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் திமுகவின் வலுவான கோட்டைகளாகக் கருதப்பட்டாலும், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைத் தக்கவைத்தே வருகின்றன.
வன்னியர், ஆதிதிராவிடர், முதலியார், நாயுடு, பழங்குடியினர், சிறுபான்மையினர் எனப் பல்வேறு சமூகத்தவர்கள் இந்தப் பிராந்தியத்தில் செறிந்து வாழ்கின்றனர். பெரும்பாலான தொகுதிகளில் வன்னியர் சமூக வாக்குகள் 50 சதவீதத்திற்கு மேல் இருந்தாலும், முதலியார், நாயுடு மற்றும் ஆதிதிராவிடர் சமூக வாக்குகளே பல இடங்களில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘வின்னிங் கார்டாக' உள்ளன.
வேலூர், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் இஸ்லாமியர்கள் மிகச் செறிவாக வசிக்கும் இடங்களாக உள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி இப்பிராந்தியத்தில் பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திமுக வெற்றிக்கு பங்களிக்கும். காங்கிரஸ் கட்சிக்குச் சோளிங்கர் போன்ற இடங்களில் பாரம்பரிய ஆதரவு இருப்பதும் திமுக அணிக்குப் பலமாகப் பார்க்கப்படுகிறது.
பாமக மற்றும் வன்னியர் சமூக வாக்குகள் அதிமுக அணிக்கு பலம். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் புதிய நீதிக்கட்சிக்கு ஆதரவு தளம் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் சமூக வாக்குகளில் கணிசமான அளவை புரட்சிப் பாரதம் கட்சி அதிமுகவுக்கு ஈர்க்க வாய்ப்பு உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் தனியாக வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது அதிமுகவுக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தலாம்.
நாம் தமிழர் கட்சி தனது வாக்கு சதவீதத்தைச் சீராக உயர்த்தியுள்ளது. தவெக தலைவர் விஜய்க்கு இந்தப் பகுதியிலுள்ள இளம் வாக்காளர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு கணிசமாக இருப்பதால், அவர் யாருடைய வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்பதை அரசியல் கட்சிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
தேர்தலுக்காகத் தீவிரமாகப் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் கட்சிகள் இந்தப் பாலாறு படுகை மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை கவனத்தில்கொள்ள வேண்டும். பாலாற்றில் மணல் கொள்ளையைத் தடுத்து, ஆற்றைப் பாதுகாப்பதோடு தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவது மக்களின் மிக முக்கிய கோரிக்கை.
வேலூர் மற்றும் ஆம்பூர் பகுதிகளில் நலிவடைந்துவரும் தோல் மற்றும் தீப்பெட்டித் தொழில்களைக் காக்க ஜி.எஸ்.டி சலுகைகள் மற்றும் நவீனத் தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும். திருவண்ணாமலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, குடியாத்தம் மற்றும் கே.வி. குப்பம் பகுதிகளில் குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் மாம்பழக் கூழ் தொழிற்சாலைகளை அமைப்பதும் இந்தப் பகுதி மக்களின் முதன்மையான எதிர்பார்ப்புகளாக இருக்கிறது

