வைகை நதிக்கரை அரசியல் | காங்கிரஸ் கோட்டை முதல் திராவிடக் களம் வரை.. விரிசலும் வெற்றியும்!
தமிழ்நாட்டின் மிக முக்கிய எட்டு மண்டலங்களின் அரசியல் பின்னணியை அப்பகுதி மக்களின் வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றுடன் அலசுகிறது ‘நதிக்கரை அரசியல்’ பகுதி. இன்று நாம் பார்க்கவிருப்பது வையை என சிலப்பதிகாரத்தில் பாடப்பட்ட வைகை நதிக்கரையின் அரசியல்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வருசநாடு குன்றுகளில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரான மதுரை வழியாக பாய்ந்தோடி வங்கக் கடலில் கலக்கிறது வைகை நதி. தமிழரின் பண்டைய நகர நாகரிகத்தைப் பறைசாற்றும் கீழடியை மட்டுமல்ல, வருசநாடு மலை, திருவேடகம், மதுரை, கீழடி, கொந்தகை, அழகன்குளம் என்று எண்ணற்ற தொல்லியல் சின்னங்களை தன் மடியில் தாங்கியிருக்கிறது வைகை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களின் பசி, தாகம் தீர்த்தபடி பாயும்‘பொய்யாக் குலக்கொடி’ வைகை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது.1967-க்கு முன்னர்வரை, தமிழகத்தின் பிற பகுதிகளைப்போலவே வைகை பாயும் இந்த மண்டலத்திலும் காங்கிரஸின் கையே ஓங்கி இருந்தது. அதன்பின்னர் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் மாறிமாறி வெற்றிகளைப் பெற்றுவந்தாலும், அமைப்புரீதியாக அதிமுக இங்கே சற்று கூடுதல் பலத்துடன் இருக்கிறது.
அதேசமயம், மதுரை மற்றும் ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இடதுசாரிகளும், தேசியக் கட்சியான காங்கிரஸும் இன்றும் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைத் தக்கவைத்து வருகின்றன. முக்குலத்தோர், யாதவர், பட்டியல் சமூகத்தினர், நாயுடு, வெள்ளாளர், செட்டியார், நாடார், சௌராஷ்டிரா எனப் பல்வேறு சமூகத்தவர்கள் இந்த மண்டலத்தில் பரவி வசிக்கின்றனர். இருப்பினும், பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிப்பவர்களாக முக்குலத்தோர், யாதவர் மற்றும் பட்டியல் சமூகத்தவர்களே உள்ளனர்.
மதரீதியாக, ராமநாதபுரம் மற்றும் மதுரை பகுதிகளில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றனர். குறிப்பாக, ராமநாதபுரம் தொகுதியில் சிறுபான்மையின பிரதிநிதிகளே தொடர்ந்து 4 முறை வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளனர். திண்டுக்கல் மற்றும் மதுரை பகுதிகளில் கிறிஸ்தவர்களின் வாக்குகளும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் சக்தியாக உள்ளன.
2026 தேர்தலைப் பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பது, சசிகலா தனிக்கட்சி தொடங்கி களம் காண்பது இந்த மண்டலத்தில் அதிமுகவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம், கடந்த முறை அதிமுகவின் வெற்றியைப் பாதித்த டிடிவி.தினகரனின் அமமுக, இப்போது அதிமுக கூட்டணியில் இருப்பது அந்த அணிக்கு பெரும் பலம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பலம் திமுக கூட்டணிக்கு இந்த மாவட்டங்களில் கூடுதல் பலம் சேர்க்கிறது.
திமுக கூட்டணியில் புது வரவாக உள்ள தேமுதிக விருதுநகர், மதுரை மாவட்டங்களில் வாக்குகளை ஈர்க்கும் சக்தியாக இருக்கும். தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் சீமான், இந்த மண்டலத்திலும் தனது வாக்கு வங்கியை உயர்த்தியிருக்கிறார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் களமிறங்கும் அவர், கவனம் ஈர்ப்பார். முதல்முறை களம் காணும் விஜயின் தவெக, முதல்தலைமுறை வாக்காளர்கள், குறிப்பாக நகர்ப்புற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் வாக்குகளைப் பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை மெட்ரோ ரயில் திட்ட அனுமதி, தூத்துக்குடி-மதுரை தொழில் வழித்தடத்தை மேம்படுத்துவது, வைகை ஆற்றைத் தூய்மைப்படுத்துவது, காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்றவை இம்மக்களின் மிக முக்கியக் கோரிக்கைகளாக உள்ளன.

