திருமணிமுத்தாறு நதிக்கரை அரசியல்.. எழுச்சி காணும் NTK, TVK.. அதிமுகவின் வாக்குவங்கி சிதையுமா?
திருமணிமுத்தாறு நதிக்கரையில் இளைஞர் அலை புதிய அரசியல் கணக்குகளை உருவாக்குகிறது. நாம் தமிழர் கட்சியின் வாக்கு உயர்வு, சீமான் பேச்சின் தாக்கம், தவெக தலைவர் விஜயின் இளைஞர் கவர்ச்சி ஆகியவை அதிமுகவின் எஃகு கோட்டையை சவாலுக்கு உள்ளாக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மாங்கனி மாநகரான சேலத்தின் சேர்வராயன் மலைத்தொடரில் உற்பத்தியாகி, சுமார் 120 கிலோமீட்டர் தூரம் பயணித்து காவிரியுடன் கலக்கிறது திருமணிமுத்தாறு நதி. சேலம் மற்றும் தருமபுரி எல்லைகளில் காணப்படும் பெருங்கற்காலக் கல்வட்டங்களும், பண்டைய ரோமானிய நாணயங்களும் தமிழரின் தொன்மையையும் வணிகச் சிறப்பையும் உலகிற்குப் பறைசாற்றுகின்றன. இன்றைய சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் வாழ்வோடும், கொங்கு மண்டல அரசியலோடும் பிரிக்க முடியாத பிணைப்பைக் கொண்டது இந்த திருமணிமுத்தாறு நதி.
1967-க்கு முன்னர் வரை தமிழகத்தின் பிற பகுதிகளைப் போலவே இங்கும் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், 1967-க்குப் பின் திமுக, அதிமுக என திராவிட அரசியலின் மையப்புள்ளியாக இந்த மண்டலம் மாறியது. குறிப்பாக, கடந்த சில தசாப்தங்களாக இந்த மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டையாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு மண்டலமாகவும் உருவெடுத்துள்ளது. அதேசமயம், எல்லைப் பகுதிகளில் உள்ள தளி போன்ற தொகுதிகளில் இடதுசாரிகள் இன்றும் தங்களது பிடியைத் தக்கவைத்து வருகின்றனர்.
வன்னியர், கொங்கு வேளாளர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், முதலியார், செட்டியார் எனப் பல்வேறு சமூகத்தவர்கள் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர். குறிப்பாக இந்த மண்டலத்தின் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிப்பவர்களாக வன்னியர் மற்றும் கொங்கு வேளாளர் சமூகத்தவர்களே உள்ளனர். மாநிலத்தின் பிற பகுதிகளைக் காட்டிலும் மலைவாழ் பழங்குடியின மக்கள் செறிவாக உள்ள பகுதியாகத் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்ளன.
அதே சமயம், ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் பன்மொழி பேசும் மொழிச் சிறுபான்மையினரும் சேலம் மாநகரப் பகுதிகளில் இஸ்லாமியர்கள் உள்ளிட்டோரும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் சக்தியாக உள்ளனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம், அதிமுகவின் இதயத் துடிப்பாகத் திகழ்கிறது. எனினும், சேலம் வடக்கு போன்ற தொகுதிகளில் திமுக தனது செல்வாக்கை நிலைநிறுத்தி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்த மாவட்டங்களில் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றாலும் அக்கட்சி மூலம் இந்த பகுதிகளில் கணிசமான வாக்குகள் அந்த அணிக்கு செல்லக்கூடும்.
சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பாமகவின் வாக்கு வங்கி யாராலும் புறக்கணிக்க முடியாத ஒன்று. எதிர்கட்சித் தலைவர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் அவரது வெற்றிக்கு பாமகவின் வாக்குவங்கி உதவும். அதேநேரத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
2024 தேர்தலில், இந்தப் பிராந்தியத்திலும் நாம் தமிழர் கட்சி தனது வாக்கு சதவீதத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சீமானின் பேச்சுகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம், தவெக தலைவர் விஜய், இளைஞர்களின் வாக்குகளைக் கவர்வார் என்பதால், அவர் யாருடைய வெற்றியைப் பாதிக்கப்போகிறார் என்று பெரிய கட்சிகள் கவலையுடன் கவனித்து வருகின்றன.
திருமணிமுத்தாறு ஆற்றைப் பாதுகாப்பதும், கழிவுநீர் கலப்பதைத் தடுத்து அதனைச் சுத்தப்படுத்துவதும் மக்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்பு. சேலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பது, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் ஐடி பூங்காக்களை விரிவுபடுத்துவது, தருமபுரி மாவட்ட இளைஞர்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்குச் செல்வதைத் தடுக்க உள்ளூரிலேயே புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவது ஆகியவை மக்களின் நீண்டகாலக் கனவுகள். மேலும், ஏற்காடு மற்றும் மேட்டூர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும் இந்த மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்.

