மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பொறுப்பு: திடீர் மாற்றம் ஏன்? பெ.சண்முகம் தேர்வின் பின்னணி!
செய்தியாளர்: ராஜ்குமார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் பெ.சண்முகம், “அரசியல் சாசனத்திற்கு விரேதமாக தமிழக காவல் துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது. மாநில மாநாட்டு பேரணிக்கு கூட அனுமதி மறுப்பது என்பதை, ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில மாநாட்டின் பேரணிக்கு அனுமதி கேட்பது என்பது அவ்வளவு பெரிய குற்றமா?” என தெரிவித்துள்ளார்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக விழுப்புரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் 24 வது மாநில மாநாட்டில் பெ.சண்முகம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.
“பாஜக-வை எதிர்த்து..”
இதுகுறித்து நம்மிடையே பேசிய சண்முகம், “நிச்சயமாக மார்க்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கான பணியை மேற்கொள்வேன். பாஜக-வை எதிர்த்து அகில இந்திய அளவில் வீரியமிக்க போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்து வருகிறது.
அரசியல் சாசனத்தை மதிக்காமல் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படுவது, மக்கள் நலன் பற்றி கவலைப்படாமல் செயல்படுவது, திட்டங்கள் - சட்டத்தினை மதிக்காமல் கார்ப்பரேட் நலன்களை சார்ந்து இயங்குவது என்றெல்லாம் பாஜக அரசு செயல்படுவதால் அவர்களுக்கு எதிராக தமிழகத்தில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
“அரசியல் சாசனத்திற்கு விரேதமாக தமிழக காவல் துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது”
போராடுகிற உரிமையை எங்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. அதனை தடுப்பதற்கு அரசுக்கும் காவல்துறைக்கும் எந்த உரிமையும் இல்லை. அரசியல் சாசனத்திற்கு விரேதமாக தமிழக காவல் துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது. மாநில மாநாட்டு பேரணிக்கு கூட காவல் துறை அனுமதி மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில மாநாட்டின் பேரணிக்கு அனுமதி கேட்பது என்பது அவ்வளவு பெரிய குற்றமா?
“பாலகிருஷஷ்ணன் கருத்து பற்றி விளக்கமளிப்போம்”
பாலகிருஷஷ்ணன் தெரிவித்த கருத்திற்கு உரிய முறையில் திமுகவினரை சந்தித்து விளக்கமளிப்போம். திமுக வெளிச்சத்தில் சிபிஎம் இல்லை; அப்படி கூறுவது பொருத்தமற்றது. சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் சங்கம் நிறுவி பதிவு செய்ய நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. அதனை தமிழக அரசு செய்யாமல் இருப்பது, கண்டிக்கத்தக்கது. சங்கத்தை அங்கீகாரம் செய்வது கடமை. அதனை முதலமைச்சரை சந்திக்கும் போது வலியுறுத்துவோம்” என்றார்.
திடீரென புதிய தலைவர் ஏன்?
மார்க்சிஸ்ட் கட்சியின் விதிப்படி மாநில செயலாளர் மற்றும் மத்திய குழு, பொலிட்பீரோ உறுப்பினர் பதவிக்கு இருக்க 72 வயதுக்குள் இருக்க வேண்டும். தற்போது பாலகிருஷ்ணனுக்கு, 71 வயது முடிந்துள்ளது. 05.02.1953 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு இந்தாண்டு 72 வயது பூர்த்தியாக இருக்கிறது. எனவே இந்த முறை மாநில செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட விருப்பம் இல்லை என அவர் கட்சியின் மத்திய குழுவுக்கு தகவல் தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டது. அதன்பேரிலேயே இன்று மாலை 5 மணி அளவில் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் அறிவிக்கப்பட்டார்.