“கே.பாலகிருஷ்ணனை மிக கேவலமாக பேசியுள்ளார் சேகர் பாபு” - செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை புதுவிளாங்குடி பகுதியில் தனது மகன் தமிழ்மணி அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொதுமருத்துவ சிகிச்சை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குடும்பத்துடன் கலந்துகொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்...
“ஒரு சட்டமன்ற உறுப்பினர் பொது நிகழ்ச்சி நடத்த முடியாத சூழலை திமுகவினர் உருவாக்கி உள்ளனர். திமுகவினர் அத்துமீறி வருகின்றனர். எப்போதும் இல்லாத வகையில் திமுகவினர் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். ஆட்சி மாறும். காட்சிகளும் மாறத்தான் செய்யும். இந்த ஆட்சியில் அதிகாரிகளின் நிலை இப்படித்தான் உள்ளது. சென்னையில் காவல் ஆணையர் கூட அவராக பேட்டி கொடுக்கிறார். அவர் யார் அழுத்தத்திற்கு உட்பட்டு பேசினார்? ஞானசேகர் கைது கூட அழுத்தத்தின் காரணமாக இருக்கலாம்.
தமிழக அரசு ஜனநாயக முறைப்படி நடக்கிறதா?
அதிமுக, மாணவிக்கு ஆதரவாக பேசி போராட்டம் நடத்திய பிறகே தற்போது அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. குடியிருந்த கோயிலில் தலைவர் ‘நான் யார்? நான் யார்?’ என பாடினார். தற்போது மக்கள் ‘சார் யார்? சார் யார்?’ என பேசுகிறார்கள். ‘தமிழக அரசு ஜனநாயக முறைப்படி நடக்கிறதா, அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டுள்ளதா?’ என அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை கே.பாலகிருஷ்ணன் எழுப்பி இருந்தார்.
“திமுகவின் குணத்தை மாற்ற முடியாது”
ஆனால் திமுகவின் அரசிதழான முரசொலியில், முக்கால் பக்கம் திமுக ஒப்பாரி வைத்துள்ளனர். செல்வாக்கு கூடியதாக கூறும் முதல்வர் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்? இது தமிழகத்திற்கு ஏற்பட்ட இழுக்கு. திமுகவின் குணத்தை மாற்ற முடியாது.
கடந்த காலங்களில் ‘தூக்கம் வரவில்லை. சவுக்கை எடுப்பேன். சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்’ என பேசிய முதல்வர், இப்போது என்ன செய்கிறார்? அன்பு சகோதரர் அண்ணாமலைதான் சாட்டையால் அடித்து தன்னையே வருத்திக் கொண்டார்.
திமுக என்ற கப்பலில் திறமையான மாலுமி இல்லை:
ஞானசேகரன் டைம் டேபிள் போட்டு குற்றச் சம்பவங்களை செய்துள்ளார். காவல்துறை சுதந்திரமாக விட்டுள்ளனர். திமுக கூட்டணியில் பயணிப்பவர்கள் யாராக இருந்தாலும் மக்கள் எதிர்ப்பை சந்திக்க வேண்டும். திமுக என்ற கப்பலில் திறமையான மாலுமி இல்லை. அது ஓட்டை கப்பலில் செல்வது போல. ஜனநாயக ரீதியாக இன்றுதான் கூட்டணி கட்சியினர் பேசுகின்றனர். வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு கே.பாலகிருஷ்ணனை மிக கேவலமாக பேசி உள்ளார். இதுபோல் பேசினால் கம்யூனிஸ்ட் பெரிய பெட்டி வாங்கியதாகதான் மக்கள் நினைப்பார்கள். திமுக கம்யூனிஸ்ட்டை எந்த வகையில் வைத்திருக்கிறார்கள் என்பது சேகர்பாபு பேச்சு மூலம் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் கே.பாலகிருஷ்ணன் யாரிடமும் பணம் வாங்க மாட்டார். நேர்மையானவர்.
திமுகவில் இருந்த குஷ்பூவையே ஆட்டு மந்தையில் அடைத்துள்ளனர்:
நடிகர் ரஜினி நடித்த படையப்பாவில் 'மாப்பிளை இவர்தான் சட்டை என்னது இல்லை' என்பது போல், ஒரு நடிகையை ஆட்டு மந்தையில் அடைக்கிறார்கள். திமுகவில் இருந்த குஷ்பூவையே ஆட்டு மந்தையில் அடைத்துள்ளனர். பாஜக தமிழசை கூட மனவேதனை பட்டு பேசுகிறார். குஷ்புவை கைது செய்து விட்டு டங்ஸ்டன் போராட்டத்தில் வைகோவை பேச விடுகின்றனர்.
நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். பிரியவே இல்லை:
அமைச்சர் துரைமுருகன், டெல்லி சென்றுள்ளார் என்கின்றனர். ஒருவேளை அவர் டங்ஸ்டன் பிரச்னைக்காக சென்றிருப்பார். அவர் மூத்த அமைச்சர். விரைவில் 6 மாதம் சுற்றுப் பயணத்தை, எடப்பாடி தொடங்கி உள்ளார். மதுரையில் இருந்து தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.
தொடர்ந்து ‘2026ல் அதிமுக இணையும், திமுகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும்’ என்ற சசிகலா, டிடிவி.தினகரனின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்.... “நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். பிரியவே இல்லை.
அது அவர்கள் கருத்து. அந்த கருத்துகளுக்கு பொதுச் செயலாளர் பதில் கொடுப்பார். ஓபிஎஸ்-ஐ எல்லோரும் மறந்துவிட்டால் ரஜினியை சந்தித்தால் செய்தி போடுவார்கள் என்பதால் அடிக்கடி போய் ரஜினியை பார்க்கிறார்” என்று செல்லூர் ராஜூ பேசினார்.