”அரசியலில் எதுவும்..” - அங்கே பை பை.. இங்கே சிக்னல்; ஒரே நாளில் இரண்டு சம்பவங்கள் செய்த ஓபிஎஸ்..!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வன் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக்குழு விலகி இருக்கிறது. ஓபிஎஸ்-ன் இந்த முடிவு குறித்தும்., அவரின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும்., என்பது குறித்தும் அரசியல் விமர்சகர்களும், மூத்த பத்திரிக்கையாளர்களும் தங்கள் கருத்துகளை புதிய தலைமுறை செய்திகளுக்கு அளித்துள்ளனர். விரிவாக பார்க்கலாம்.
அதிமுக கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கினார். அதே சமயத்தில் பாஜக உடன் இணக்கமான சூழ்நிலையிலும் இருந்து வந்தார். இந்நிலையில் 2026 சட்டமன்றத்தேர்தல் 8 மாதங்களே உள்ள நிலையில் பாஜக வும் அதிமுக வும் கூட்டணியை உறுதிபடுத்தியுள்ளன. அதே வேளையில் இரு கட்சி தொண்டர்களையும் ஒருங்கிணைத்து தேர்தல் பணிகளை செய்ய வைப்பதிலும் அதற்கான சூழ்நிலையை உருவாக்குவதிலும் அதிமுக வின் தலைமையும் பாஜகவின் தலைமையும் முயற்சி செய்து வருகின்றன.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் பன்னீர்செல்வத்தின் மதிப்பு குறைந்து வருவதாக பார்க்கப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் விதமாக சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம், சந்திப்பதற்கு நேரம் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். அதில், 'தமிழக பயணத்தில் வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கொடுக்க வேண்டும்.. அது மிகப்பெரிய பாக்கியமாக இருக்கும்' எனத் தெரிவித்திருந்தார். ஆனாலும் அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.
இத்தககைய சூழ்நிலையில் தான் இன்று சென்னையில் உள்ள ஆழ்வார்ப்பேட்டையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவினைக் கூட்டி ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், மூத்த தலைவர்கள் பன்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், ஓபிஎஸ் என அணியினர் அனைவரும் இடம்பெற்றனர். சுமார் மூன்று மணி நேரம் நடைப்பெற்றது. அதன்படி, இதுநாள் வரை தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்த உரிமை மீட்புக் குழு, இப்போது அதில் இருந்து வெளியேறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது. என ஓ. பன்னீர்செல்வம் மத்தியில் முடிவை அறிவித்திருக்கிறார் பன்ருட்டி ராமச்சந்திரன்.
இந்நிலையில் இந்த முடிவு குறித்து அரசியல் விமர்சகர்களும், மூத்த பத்திரிக்கையாளர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி கூறுகையில், “மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு பன்னீர் செல்வம் என்ற தலைவரை இனி அசிங்படுத்த முடியாத என்ற அளவிற்கு அசிங்கப்படுத்தி விட்டார்கள், அதனால் தான் நாங்கள் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறினோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது சரியான முடிவு. ஆனால், நாளையே பிரதமர் கூப்பிட்டார். அமித் ஷா கூப்பிட்டார் என போய் விடாமல் இருந்தால் அவருக்கு நல்லது. ஓ பன்னீர் செல்வம் கூட்டணியில் இருந்து வெளியேறிய உடன் பாஜக பின்னடைவை சந்தித்து உள்ளது. கண்டிப்பாக எடப்பாடி பாஜக விற்கும் துரோகம் செய்வார். பாஜக ICU வில் உள்ளது”. இவ்வாறு அவர் பேசினார்.
பாஜகவை சார்ந்த ராம ஸ்ரீநிவாசன் கூறுகையில், ”பன்னீர் செல்வம் கூட்டணியில் இருந்து விலகியது துரதிருஷ்டமான முடிவு, திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைந்து பேச தொடங்கி இருக்கும் நிலையில் இப்போது விலகியதை தவிர்த்திருக்கலாம். திமுக வின் கூட்டணிக்கு ஓ. பன்னீர் செல்வம் சென்றால் அவரின் நிழல் கூட வராது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசியல் விமர்சகர் அக்னீஸ்வரன் கூறுகையில், ”பிரதமர் நேரம் கொடுக்காததே அவர்களின் விலகலுக்கு காரணமாக இருக்கும். இவர்களுக்கு இரண்டே வாய்ப்புகள் தான் இருக்கின்றன. ஒன்று திமுக அல்லது தவெக இதில் எதில் சேரப்போகிறார்கள் என்பதை நாம் செப்டம்பர் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார்.
இதற்கிடையே, காலையில் முதல்வர் ஸ்டாலினை வாக்கிங் போகும் போது ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருந்த நிலையில், மீண்டும் மாலையும் சந்தித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு இன்று மாலை திடீரென வந்த ஓ.பன்னீர்செல்வம், அவருடன் சந்திப்பு நடத்தினார். ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வீட்டு வாசல் வரை வந்து வரவேற்றார்.
இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம். எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. நான் ஜெயலலிதாவோடு 25 ஆண்டு காலம் நேரடி பார்வையில் பணியாற்றி இருக்கிறேன். அரசியல் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் அனைத்தும் எனக்குத் தெரியும்.
மக்களவையில் சமக்ரா சிக்ஷா நிதி உதவி பற்றி கேள்வி எழுப்பியபோது மத்திய அரசு அதை ஏற்கவில்லை. தமிழகத்துக்கு உரிய நிதி கொடுக்காததால் பாஜக மீது எனக்கு வருத்தம் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்யத் தவறினால், அதைக் கண்டறிந்து தினமும் கண்டன அறிக்கை வெளியிட்டு வருகிறேன்” என்றார்.