கூட்டணி மாறும் தேமுதிக?.. முதல்வர் சந்திப்பில் நடந்தது என்ன? ஆழ்வார்பேட்டையில் அதிரடி
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதல்வர் ஸ்டாலின் உடனான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் சந்திப்பு கவனம் ஈர்த்துள்ளது. எந்த கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கிறது என்பது அரசியல் களத்தில் பிரதானமான கேள்வியாக இருக்க, ஸ்டாலின் உடனான சந்திப்பில் நடந்தவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி.. புதியக்கட்சி வரை அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. இந்த நேரத்தில், திமுக கூட்டணி 2019ம் ஆண்டில் இருந்தே கட்டுக்கோப்பாக நிற்க, அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. மறுபக்கம் சீமான் தனித்து போட்டி என்ற முடிவில் இருக்க, தனது தலைமையில் தனி அணியை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார் விஜய்.
இதில், 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமகவும், அமமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிகவும் 2026 தேர்தலில் யார் பக்கம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில், அதிமுகவோடு தேமுதிக கரம் கோர்த்தாலும், தேர்தலுக்குப் பிறகு அந்த உறவு சுமூகமானதாக இல்லை. இந்த நேரத்தில், தாங்கள் எந்த கூட்டணியில் அங்கம் வகிக்கப்போகிறோம் என்பதை, அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி மாநாடு நடத்தி, அதில் அறிவிக்கப்போவதாக கூறியுள்ளது தேமுதிக தலைமை.
இப்படியான சூழலில்தான், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசியிருக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா. அவருடன், தேமுதிக நிர்வாகிகள் சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முதல்வர் குடும்பம் சார்பாக, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, மகன் உதயநிதி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
நடந்த இந்த சந்திப்பில், அன்மையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முதல்வரிடம், பிரேமலதா உள்ளிட்டோர் நலம் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, குடும்பரீதியாகவும், நட்பு ரீதியாகவும் இந்த சந்திப்பு நடந்ததாகவும், உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், சந்திப்பில் நடந்தது குறித்து தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதியிடம் தொடர்புகொண்டு பேசியபோது, மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பியபோது, இப்போதைய முதல்வர் ஸ்டாலின்தான் முதன்முதலாக வந்து நலம் விசாரித்ததாகவும், அதன் அடிப்படையில் சிகிச்சை முடிந்து திரும்பிய முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே இந்த சந்திப்பு நடந்ததாகவும் பகிர்ந்துகொண்டார்.
அதே நேரம், சந்திப்பில் அரசியலோ, கூட்டணியோ பேசவில்லை என்றும், பிரேமலதாவின் சுற்றுப்பயணம் முடிந்த பிறகு, குறிப்பாக ஜனவரி 9ம் தேதி மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றும் நம்மிடம் பகிர்ந்தார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, ஓய்வுக்குப் பிறகு இன்று முதல்வர் தலைமை செயலகம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.