அதிமுக-பாஜக கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம்..? எடப்பாடி பழனிசாமி பச்சைக்கொடி!
அதிமுக-பாஜக கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி பச்சைக்கொடி காட்டிய நிலையில், டிடிவி தினகரன் அவரை வரவேற்கும் முயற்சியில் உள்ளார். கூட்டணியில் இணைந்தால், ஓபிஎஸ் தரப்பிற்கு 3 தொகுதி வழங்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இருந்துவரும் அதிமுக-பாஜக, நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அன்புமணி தலைமையிலான பாமகவையும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவையும் கூட்டணிக்குள் இழுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் எந்த கூட்டணியிலும் சேர மாட்டோம் என சூளுரைத்த டிடிவி தினகரன், இறுதியில் அதே தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஐக்கியமாகியுள்ளார்.
மேலும் ஓ. பன்னீர் செல்வமும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும், அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என அவர் நினைத்தால் நிச்சயம் எங்களுடன் வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார் டிடிவி தினகரன்.
இந்தசூழலில் ஓ. பன்னீர் செல்வம் NDA கூட்டணியில் இணைய எடப்பாடி பழனிசாமியும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும், விரைவில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
NDA கூட்டணியில் இணையவிருக்கும் ஓபிஎஸ்..
இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூட்டணிக்கு ஓபிஎஸ் வருவது குறித்து பேசுகையில், மூன்று முறை அதிமுக முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். அவர் எப்படி திமுகவுக்கு போவார்? திமுக எப்படி எங்களுக்கு சரி வரும், அதிமுகவால், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்.
தவெக கூட்டணிக்கு நான் வருவேன் என செங்கோட்டையன் நம்பினார். அதை மறுக்கவில்லை. நான் மறுக்க முடியாமல் தயக்கத்தில் இருந்தேன். பார்ப்போம் எனக்கூறினேன். நான் அதிமுக கூட்டணிக்கு செல்லா மாட்டேன் என செங்கோட்டையன் நம்பிக் கொண்டிருந்தார்.
ஓ. பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது, பிற கட்சிகளும் வரவிருக்கின்றன” என்று கூறினார்.
இந்தசூழலில் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பிக்கு பிறகான சில மணி நேரத்தில், ஓ. பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் NDA கூட்டணியில் இணைய எடப்பாடி பழனிசாமி பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும், ஓபிஎஸ் இணைந்தால் அவர் தரப்பிற்கு 3 தொகுதி வழங்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் ஓபிஎஸ் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

