“ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் வருவார்..” - டிடிவி தினகரன் நம்பிக்கை
2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியில் அதிமுக-பாஜக, பாமக, அமமுக ஆகியவை இணைந்துள்ள நிலையில், டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோர் கருத்து வேறுபாடுகளை மறந்து, அம்மாவின் பிள்ளைகள் என இணைந்துள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இருந்துவரும் அதிமுக-பாஜக, நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அன்புமணி தலைமையிலான பாமகவையும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவையும் கூட்டணிக்குள் இழுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் எந்த கூட்டணியிலும் சேர மாட்டோம் என சூளுரைத்த டிடிவி தினகரன், இறுதியில் அதே தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஐக்கியமாகியுள்ளார்.
இந்தசூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி நடத்திய பரப்புரை பொதுக்கூட்டத்தில் மோடியுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதஸ் போன்றோர் கலந்துகொண்ட நிலையில், கூட்டத்திற்கு பிறகு பேசிய டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வமும் எங்களுடன் வருவார் என தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வமும் எங்களுடன் வருவார்..
மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் ஒன்றாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூட்டணி குறித்து டிடிவி தினகரனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். எனக்கும், டிடிவி தினகரனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், தற்போது அனைத்தையும் இருவரும் மறந்துவிட்டதாகவும், நாங்கள் அம்மாவின் பிள்ளைகள் என்று தெரிவித்தார்.
இந்தசூழலில் ஓ.பன்னீர்செல்வம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், “ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என அவர் நினைத்தால் நிச்சயம் எங்களுடன் வர வேண்டும்” என தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

