என்னது!! காமராஜர் திறந்த பள்ளியில் அப்துல் கலாம் படித்தாரா? சீமான் பேச்சும் உண்மையும்!
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் காமராஜர் பெருமைகளை சொல்லி பேசிக் கொண்டிருந்தார் சீமான். அப்பொழுது ஒரு இடத்தில், “மூதறிஞர் ராஜாஜி பணம் இல்லை என்று 6000 பள்ளிக் கூடங்களை முடிவிட்டார். அவருக்கு பின் வந்த காமராஜர் மூடப்பட்ட 6 ஆயிரம் பள்ளிக்கூடங்களை திறந்ததோடு, கூடுதலாக 14 ஆயிரம் பள்ளிக் கூடங்களையும் திறந்து நம்மையெல்லாம் படிக்க வைத்தார். நானும் மேடையில் இருப்பவர்கள் அனைவரும் அவர் திறந்து வைத்த பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள்.
அப்துல் கலாம் வந்து படிச்சி அறிவியல் விஞ்ஞானி ஆகி அணுகுண்டு கண்டுபிடிச்சி பொக்ரைனில் வெடிச்சி இந்தியா வல்லாதிக்கம் என்று பேசிக் கொண்டிருந்தால், அது காமராஜர் திறந்த சாவி தான். அவர் திறந்த பள்ளிக் கூடம் தான்” என்று சுட்டிக்காட்டி பேசினார்.
உண்மையில் 1954 ஆம் ஆண்டு காமராசர் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகும் போது அப்துல் கலாம் கல்லூரி படிப்பையே முடித்துவிட்டார். அப்படி இருக்கையில் சீமான் பேசியது உண்மைக்கு மாறான தகவல் ஆகும்.
அப்துல் கலாம் எங்கெல்லாம் படித்தார்?
1931 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்த அப்துல் கலாம் தன்னுடைய ஆரம்ப கல்வியை ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்துள்ளார். இங்கு 5 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர், 6 ஆம் வகுப்பு முதல் ராமேஸ்வரத்தில் உள்ள சுவர்ட்ச் மேல் நிலைப் பள்ளியில் (Schwartz Higher Secondary School) படித்துள்ளார்.
பியூசி முடித்த பின்னர் திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் (St. Joseph's College) கல்லூரியில் 1954 ஆம் ஆண்டு இளங்கலை முடித்து இருக்கிறார். அதன்பிறகு மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனமான எம்.ஐ.டி-யில்( Madras Institute of Technology) Aeronautical Engineering படித்து பட்டம் பெற்றார். 1954 ஆம் ஆண்டில் தான் காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். அதற்கு முன்பு விடுதலை போராட்டத்திற்காக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பாடுபட்டார். சிறை சென்றார்.
உண்மை இப்படி இருக்க சீமான் பேசியது முற்றிலும் பிழையான தகவல் இது. சில தினங்களுக்கு முன்பு தான் மு.க.முத்து மரணத்தையொட்டி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த போது, “தாத்தா காமராஜர் இறந்ததற்கு அதிகமாக அழுதது அண்ணாதுரை தான் என்று சொல்வார்கள்” என்று கூறியிருந்தார். ஆனால், காமராஜர் 1975 ஆம் ஆண்டு இறந்த நிலையில் அவருக்கு 6 ஆண்டுகள் முன்பாகவே 1969-லேயே அண்ணா மரணம் எய்தினார். அதனால் சீமானின் அந்த பேச்சும் விவாதம் ஆனது.