2026 தேர்தல்| ”தவெகவுடன் கூட்டணி அமைக்க முயலவில்லை..” - அமித் ஷா
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக, விஜய்யின் தவெகவை கூட்டணியில் இணைக்க பலமுறை முயன்றதாக தகவல்கள் வந்தது. அதனை மத்திய உள்துறை அமைச்சர் மறுத்திருக்கிறார்.
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியிலும், எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்டது. போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. முதன்முறையாக தேர்தலை சந்திக்கக் காத்திருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தசூழலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக, விஜய்யின் தவெகவை கூட்டணியில் இணைக்க பலமுறை முயன்றதாக தகவல்கள் வந்தது. இதற்கு தவெக தரப்பு பிடிகொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது .
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனியார் தொலைக்காட்சி ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் தவெகவுடன் கூட்டணி அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்த எந்த முயற்சியும் நாங்கள் எடுக்கவில்லை, அவர் எங்களுடன் வந்தால், அது எங்கள் வாக்குவங்கியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறார். விஜய்யைத் தொடர்புகொள்ள தாங்கள்
முயலவில்லை என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.
மேலும் அதிமுக கூட்டணிக் குறித்து பேசிய அவர் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவே 'பெரிய அண்ணன்' என்றும், அக்கட்சியுடன் இணைந்தே பாஜக தொடர்ந்து பணியாற்றும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவின் அமைப்புரீதியான பலம் குறைவாக இருப்பதாக ஒப்புக்கொண்டார். ஆளும் திமுக அரசுக்கு எதிராக மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவுவதாகவும், வெறுப்பு அரசியலை திமுக முன்னெடுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். சிறிய கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

