2026 தேர்தலில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர்.சி.. இரட்டை இலை சின்னத்தில் போட்டி!
2026 சட்டமன்ற தேர்தலில் புதிய நீதிக்கட்சி சார்பாக இயக்குநர் சுந்தர்.சி போட்டியிட விருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக, சசிகலா - ராமதாஸ் என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் பாஜகவுக்கு - 27 தொகுதிகளும், பாமகவுக்கு - 18 தொகுதிகளும், அமமுகவுக்கு - 11 தொகுதிகளும், த.மா.காவுக்கு 5 இடங்களும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 2 இடங்களும், ஜான் பாண்டியன் கட்சி மற்றும் புரட்சி பாரதம் கட்சிக்கு தலா 1 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் புதிய நீதிக்கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியும், பாஜக ஒரு தொகுதியும் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்த நிலையில், தற்போது ஒரு தொகுதியில் இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
புதிய நீதிக்கட்சிக்காக களமிறங்கும் சுந்தர்.சி..
புதிய நீதிக்கட்சி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு கீழ்கண்ட வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.
மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் சுந்தர் சி அவர்கள் சன் ஆப் சிதம்பரம் பிள்ளை வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். 30 3 2026 திங்கட்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இரண்டாவது வேட்பாளராக சென்னையில் திங்கட்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம். இடம் நேரம் விரைவில் தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

