தமிழகத்தில் தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை.. இரண்டு நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகம்- புதுவை- காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வரும் 19ஆம் தேதி வாக்கில் கேரள – கர்நாடக பகுதிகளுக்கு அப்பால், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களிலும், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில், மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.