அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், சாலை வலம்.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளிட்டது தமிழக அரசு.!
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலை வளங்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று (ஜனவரி 6) இதுகுறித்தான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, கூட்டம் நடத்துவதற்கு, குறைந்தது 10 நாட்களுக்கு முன்பு அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்றும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடும் பொதுக்கூட்டத்துக்கு 30 நாட்களுக்கு முன்பே அனுமதிக்காக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி அளிப்பது அல்லது மறுப்பு தெரிவிப்பதை 15 நாட்களில் தெரிவிக்க வேண்டும். அனுமதி மறுப்புக்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சாலைவலத்தை மூன்று மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், சாலையில் ஒருபுறம் மட்டும் சாலைவலத்தை நடத்த வேண்டும், மறுபுறம் போக்குவரத்துக்கு வழிவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டம் நடைபெறும் நேரத்தை சரியாக தெரிவிக்க வேண்டும் எனவும், கூட்டத்துக்கு வருபவர்களின் பாதுகாப்பு, மேலாண்மை, ஒழுங்குபடுத்துதல் அனைத்தும் ஏற்பாட்டாளர்களின் முதன்மை பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளளது. மேலும், குடிநீர், சுகாதாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது.

