”கரூரில் ஒரே இரவில் உடற்கூறாய்வு நடந்தது செந்தில் பாலாஜியை காப்பாற்ற தான்..” - நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு தேர்தலையொட்டி பாஜக மாநிலத் தலைவர் மேற்கொண்ட தமிழகம் தலைநிமிர தமிழன் பயணத்தின் நிறைவுவிழா புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்திவயல் பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டுள்ளார். முன்னதாக, தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் இவ்விழாவில் உரையாற்றினர்.
அப்போது, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ”தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணத்தின் போது, எல்லா கிராமத்திற்கும் எல்லா நகரத்திற்கும் செல்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தப் பயணத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை சந்தித்தேன். தமிழ்நாட்டில், ஒவ்வொரு குடும்பமும் கோவிலுக்குச் செல்லும்போது, ’திமுக ஆட்சியை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பு; மக்களை காப்பாற்று’ என வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் மீட்பரை தேடிக் கொண்டிருக்கும் அத்தகைய நேரத்தில் தான், அரசியல் சாணக்கியர் அமித் ஷா தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறார். அதன்மூலம், தமிழ்நாட்டில் மாபெரும் மாற்றத்தை கொண்டுவரப் போகிறார்.
இன்று தமிழக மக்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயந்து கொண்டிருக்கிறார்கள் காரணம் தமிழ்நாடு முழுதும் போதைப்பொருள் மயமாகிக் கொண்டிருக்கிறது. மேலும், தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணத்தின் இறுதி நாள் இது கிடையாது, இதுதான் தொடக்கம். நாம் அனைவரும் விரதம் இருப்பது போல், 3 மாதங்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் ஒன்றிணைந்து இந்த திமுக ஆட்சியை அகற்ற அல்லும் பகலும் அயராது பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என அனைத்து குற்றங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தவறுகளை செய்வதெல்லாம் திமுககாரர்கள் தான். விழுப்புரத்தில் ஒரு அமைச்சர் பெண்கள் குறித்து தவறாக பேசுகிறார். அமைச்சர் சேகர் பாபு கோவிலில் பக்தர்களிடம் தவறாக பேசுகிறார். மேலும், கரூரில் நடந்த ஒரு கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். அப்போது, இரவோடு இரவாக முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்றார். ஒரே இரவில் உயிரிழந்த அனைவருக்கும் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை காப்பாற்றவே என்பதை இந்த மேடையில் பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்தனர், விழுப்புரத்தில் 17 உயிரிழந்திருக்கின்றனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள்மயமாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், ஒரு குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு போலியான கூட்டணியை உருவாக்கியிருக்கிறார். ஆனால், உள்துறை அமைச்சர் உருவாக்கியிருக்கும் கூட்டணி ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணி. ஆட்சி மாற்றம் என்பது வந்தே தீரும்.
நடந்து முடிந்த பிகார் தேர்தலில் 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெற்றது, அதற்கு காரணம் அமித் ஷா. கேரளா உள்ளாட்சித் தேர்தலில், திருவனந்தபுரத்தை கைப்பற்றியிருக்கிறது. இவ்வாறு, பீகாரில் வீசிய, கேரளாவில் வீசிய அந்தக் காற்றுதான் தமிழகத்திலும் வீசப்போகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறுவது உறுதி ” எனத் தெரிவித்துள்ளார்.
