‘நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ சென்னையில் மீண்டும் மின்சார வடிவில் டபுள் டக்கர் பேருந்துகள்..!
ஒரு காலத்தில் சென்னையை கலக்கிவந்த டபுள் டக்கர் பேருந்துகள், தற்போது எலெக்ட்ரிக் பேருந்துகள் வடிவில் மீண்டும் சாலையை அலங்கரிக்க உள்ளதால் சென்னைவாசிகள் உற்சாகத்தில் உள்ளனர். 1980-களில் தொடங்கி 2008ஆம் ஆண்டுவரை சென்னையின் நடமாடும் அடையாளமாக இரட்டை அடுக்கு பேருந்துகள் ஓடிக்கொண்டிருந்தன. 17ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, தற்போது தேசிய தூய்மையான காற்றுதிட்டத்தின் ((NCAP)) கீழ், சுமார் 10 கோடிரூபாய் முதலீட்டில், 20 இரட்டை அடுக்கு மின்சாரப் பேருந்துகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
குறிப்பாக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ((MTC)), வாரநாட்களில் அதிக தேவை உள்ள வழித்தடங்களிலும், வார இறுதிநாட்களில் பொழுதுபோக்கு சுற்றுலாவுக்கும் இந்த பேருந்துகளைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த பேருந்துகள், உயரம் அதிகம் என்பதால் அண்ணா சாலை, காமராஜர் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 90 பேர் வரை அமரும் வகையில், முழுக்க சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இந்தப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இரட்டை அடுக்கு பேருந்துகளின் நிர்வாகத்தை தனியார் ஒப்பந்த நிறுவனமும், வழித்தடம் மற்றும் கட்டண நிர்ணயத்தை அரசாங்கமும் மேற்கொள்ள உள்ளன. மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத்துக்கு அடுத்தபடியாக, சென்னை பெருநகரசாலைகளும் இரட்டை அடுக்கு மின்சாரபேருந்துகளால் பொலிவுபெற உள்ளன.