நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது கடும் தாக்குதல்.. இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்!
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை நடுக்கடலில் சுற்றி வளைத்து தாக்கிய இலங்கைக் கொள்ளையர்கள், ஆயிரம் கிலோ மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளனர். வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், 3 நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்குப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் சுற்றி வளைத்த இலங்கைக் கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களை தாக்கியுள்ளனர்.
சுமார் ஆயிரம் கிலோ வலைகள், ஜிபிஎஸ் கருவி பேட்டரி, டீசல், அலைபேசிகள் என 6 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பறித்துக் கொண்டு விரட்டியடித்ததாக, கரை திரும்பிய மீனவர்கள், கடலோர காவல் குழும போலீஸில் புகார் அளித்துள்ளனர். மேலும் படகுகளும் சேதமுற்றதாக அவர்கள் புகாரில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மத்திய - மாநில அரசுகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடியிடம், முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டிருந்தது. அதில் இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவது ஏழை மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இந்த சிக்கலான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணப் பிரதமர் மோடி நேரடி கவனத்தைச் செலுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய படகுகளையும் விடுவிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போது கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது பெரும் வேதனைக்குரியதாக இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.