முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்x

தொகுதி மறுவரையறை மசோதா என்றால் என்ன..? ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்..? நாளை கருப்பு கொடி போராட்டம்!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின், இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
Published on
Summary

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் தொகுதி மறுவரையறை, லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்வு, பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மாற்றப்படுவது தென் மாநிலங்களுக்கு அநீதி என ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பாஜக ‘நெருப்போடு விளையாடுகிறது’ என்று எச்சரித்து, கருப்புக்கொடி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் திட்டமாக, லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850ஆக அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா போன்ற மசோதாக்களை நாளை நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இம்மசோதாக்களின் படி மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டு, பெண்களுக்கு 280 இடங்களாக ஒதுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

mk stalin
mk stalinx page

இந்தசூழலில் தான் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு உள்ளது என்றும், வடமாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்றும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால் தென்னிந்திய மாநிலங்களை விட வட மாநிலங்களுக்கே அதிக தொகுதிகள் சேரும் வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து மக்களிடையே பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தென்னிந்திய மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதிகளைக் குறைப்பதும், வட மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்குவதும் மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் என்று எதிர்ப்பை பதிவுசெய்திருந்தார்.

Anbumani, Vijay & EPS
Edapadi Palanisamy web

மற்றொரு பக்கம் ஸ்டாலினை விமர்சித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'பல ஆண்டுகளாக இடஒதுக்கீடு கோரி வரும் பெண்களின் கோரிக்கை நிறைவேறவிருக்கும் அருமையான தருணம், அதை முதலமைச்சரால் ஜீரணிக்க முடியவில்லை’ என குற்றம்சாட்டியுள்ளார்.

முக ஸ்டாலின்
12 பேர் மயக்கம்.. பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்த விஜய்.. அனுமதியிருந்தும் ரோடு ஷோ தவிர்ப்பு!

நெருப்போடு விளையாடுகிறது பாஜக..

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டதோடு, மக்களுக்கும் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஸ்டாலின், “இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?

ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”!

விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!

தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.

தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!

தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!” என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் பகிர்ந்திருக்கும் வீடியோவில், “வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்கி, தென்மாநிலங்கள் வலிமையிழந்தால் தமிழகம் சும்மா இருக்காது. பெயரளவிற்கு தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் என கூறிவிட்டு, வட மாநிலங்களுக்கு மிக மிக கூடுதலாக வழங்கப்போகிறார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களுக்கு கொடுக்கும் தண்டனையா இது. டெல்லி பாஜக தமிழர்கள் யார் என காண்பிக்கும் நேரம் வந்துவிட்டது" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக ஸ்டாலின்
"தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது.. பாஜகவுக்கு படிப்பறிவு இருந்து என்ன பண்ணினார்கள்?" - சீமான்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com