12 பேர் மயக்கம்.. பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்த விஜய்.. அனுமதியிருந்தும் ரோடு ஷோ தவிர்ப்பு!
திருப்பூர் பெருமாநல்லூரில் தவெக தலைவர் விஜயை காண ஆயிரக்கணக்கானோர் வெயிலில் காத்திருந்த நிலையில், பெண்கள் உட்பட 12 பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அனுமதி இருந்தும் கூட்ட நெரிசல், பாதுகாப்பு சிக்கல் காரணமாக திட்டமிட்ட ரோடு ஷோவை ரத்து செய்து, குறுகிய பேச்சுக்குப் பிறகு நேராக கோவைக்கு திரும்பினார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நேற்று பெருமாநல்லூரில் ரோடு ஷோ மற்றும் பரப்புரை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி விஜயை காண காலை முதலே அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர்.
இந்நிலையில், கடுமையான வெயில் காரணமாக பெண்கள் உட்பட 12 பேர் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். பெருமாநல்லூரில் விஜய் பரப்புரைக்கு மாலை 5 மணி வரை நேரம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 4.45 மணிபோல அங்கு வந்த விஜய், கூட்டத்திற்கு மத்தியில் பரப்புரை நிகழ்த்தினார். அங்கு அவர் பேச ஆரம்பிக்கும்போதே தடுப்புகளை மீறி பலர் வர முற்பட்ட நிலையில், அவர்களுக்கு அறிவுரை வழங்கியபடியே தனது பேச்சை தொடங்கினார். பின்னர், தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த விஜய், சரியாக ஐந்து மணிக்கு பேச்சை முடித்தார்.
பரப்புரை முடிந்த நிலையில், கூட்டம் பாதுகாப்பையும் மீறி முன் பகுதிக்கு திரண்டதால், தவெக தலைவர் விஜய் ஏற்கனவே திட்டமிட்டப்படி பெருமாநல்லூர் முதல் பூலுவபட்டி வரை ரோட் ஷோ செய்யாமல் திரும்பி கோவைக்குச் சென்றுவிட்டார்.
காலை முதலே பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் ஆயிரக்கணக்கான தவெக ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், காலை முதல் மணிக்கணக்கில் காத்திருந்த 12 பேர் மயக்கம் அடைந்தனர். உடனடியாக அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒருவரின் நிலைமை மோசமான நிலையில், அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
முன்னதாக, சிறு குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என தவெக தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. எனினும், பலர் அந்த அறிவுரையைப் பொருட்படுத்தாமல் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல், பல குழந்தைகள் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தொண்டர்கள் பலர் காவல்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி, அருகாமையில் இருந்த கடைகளின் கூரைகள் மீது ஏறி நின்றனர். மேலும், போலீஸார் பேரிகேட்கள் அமைத்திருந்தும், ரசிகர்கள் முண்டியடித்து முன் பகுதிக்கு வர முயன்றனர். இதனால், 100 க்கும் மேற்பட்ட போலீசார் கயிறுகள் மற்றும் பேரிகேட்களை வலுப்படுத்தி கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
பெருமாநல்லூரில் இருந்து பூலுவப்பட்டி பகுதி வரை ரோடு ஷோவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையிலும், அந்தப் பாதையில் செல்லாமல், வந்த வழியிலேயே திரும்பி கோவைக்குப் புறப்பட்டுச் சென்றார் விஜய்.

