’விஜய் ஊழல்வாதி என்பதற்கு இதுதான் சாட்சி..’ - விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜயை வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. இதையடுத்து கட்சிகளில் கூட்டணி வேலைகளிலும், பிரசாரங்களிலும் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றன. இன்னொரு புறம், ஒரு கட்சியை இன்னொரு கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், தவெக தலைவர் விஜய், அதிமுகவை விமர்சிக்காத நிலையில், பனையூரில் நடைபெற்ற தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவின் போது அதிமுக ஊழல் கட்சி என கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து அதிமுக கட்சி தலைவர்கள் அனைவரும் தவெக தலைவர் விஜயை நேரடியாக தாக்கி வீடியோ வெளியிட்டும், நேர்காணலிலும் விமர்சித்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்று பேசியிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தவெக தலைவர் விஜயை ஊழல்வாதி என்று விமர்சித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, த.வெ.க தலைவர் விஜய் ஊழல்வாதி என்பதற்கு அவர் வரி ஏய்ப்பு செய்ததே சாட்சி. நீதிமன்றமே அதை தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
கட்சி ஆரம்பித்த பின்பு எங்கும் வெளியில் வருவதில்லை, அதுவும் கரூர் சம்பவம் நடைபெற்ற பின்பு 72 நாட்கள் அவர் வெளியே வரவில்லை. எந்த அரசியல் தலைவரும் அப்படி இருக்க மாட்டார்கள்” என விமர்சித்து பேசியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை விஜய் கணக்கில் காட்டவில்லை என குற்றஞ்சாட்டியிருந்த வருமாவ வரித்துறை, வருமானத்தை மறைத்ததற்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பாட்டநிலையில், உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

