கச்சத்தீவு | “அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார்.. ஆளுநர் போட்டியிட வேண்டாம்” - அமைச்சர் ரகுபதி
கச்சத்தீவு தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, “ராமேஸ்வர பயணத்தின்போது, துயரத்தில் உழலும் மீனவ சமூகத்தைச் சேர்ந்த மக்களைச் சந்தித்தேன். 1974 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு அநீதியான ஒப்பந்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் மீன்பிடி மக்களின் மீன்பிடி உரிமைகளைப் பறித்து அப்போதைய டெல்லி மற்றும் சென்னை அரசாங்கங்கள் பெரும் பாவத்தினைச் செய்துள்ளன. அப்போதிலிருந்தே நமது மீனவ மக்கள் நீடித்த துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நீடித்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து நிரந்தர தீர்வினை நோக்கி பாடுபட வேண்டும். இப்பிரச்னையை அரசியலாக்கி மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாக, மாநில அரசின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்கும். அனைத்திற்கும் மேலாக 1974ஆம் ஆண்டு நடந்த தவறுக்கு, அன்று கூட்டணியில் இருந்து இன்று மாநிலத்தை ஆடும் கட்சிக்கும் சமபொறுப்பு உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநரின் கருத்தை விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “2024-ஆம் ஆண்டில் 528 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தாண்டு ஜனவரியில் மட்டும் 53 மீனவர்கள் கைதானார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக வலியுறுத்தியும் , திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் செய்தும் தமிழக மீனவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை ஒன்றிய பாஜக அரசு. ஒன்றிய பாஜக அரசின் இயலாமையை மறைக்க ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசு மீது வீண் அவதூறு பரப்பி வருகிறார்.
தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு மட்டுமல்லாது தென்னிந்தியா முழுமையும் வஞ்சிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுப்பிய விவகாரம் இந்திய முழுமைக்கும் பேசு பொருளாகியிருக்கிறது. அதனைத் திசை திருப்ப ஒன்றிய அரசின் அஜெண்டாவை நிறைவேற்றக் கச்சத் தீவைக் கையில் எடுத்திருக்கிறார் ஆளுநர் ரவி.
1974-ல் போன கச்சத் தீவைப் பற்றி கவலைப்பட்ட பிரதமர் மோடி அவர் கண் முன்னே இந்தியாவின் 2000 சதுர கி.மீ பகுதிகள் சீனா ஆக்கிரமித்த போது அமைதியாக இருந்தார். தேர்தல் வரும்போதெல்லாம் கச்சத் தீவு கேடயத்தைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள், இப்போது தொகுதி மறுசீரமைப்பில் பாஜகவின் சதித் திட்டம் அம்பலத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகக் கச்சத் தீவை மீண்டும் கிளப்புகிறார்கள்.
கச்சத் தீவு பற்றிய கப்ஸா கதைகளை பேசுவதை நிறுத்துங்கள் ஆளுநரே! இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட நமது மீனவர்களை விடுதலை செய்ய உங்கள் எஜமானர் மோடியிடம் கோரிக்கை வையுங்கள். அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார். ஆளுநர் அவரோடு போட்டியிட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.