தவெக பொதுக்கூட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு; இஷா சிங் ஐபிஎஸ்-க்கு புதுவை அமைச்சர் பாராட்டு!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டம் 9-ஆம் தேதி புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது பாஸ் வழங்குவது தொடர்பாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் முயற்சிகள் மேற்கொள்ளாதது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்திடம் புதுச்சேரி கிழக்கு மண்டல எஸ்.பி இஷா சிங் கேள்வி எழுப்பினார். அப்போது, ஏற்கனவே உங்களால் 40க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ள நிலையில், பாஸ் இல்லாமல் மக்களை உள்ளே அனுப்ப வேண்டாம் என்றும் காவல்துறையினர் உடைய கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
அந்த காணொளி இணையதளத்தில் வைரலான நிலையில், பலரும் இஷா சிங் ஐ.பி.எஸ்-ன் துணிச்சல் மிகுந்த செயலை பாராட்டினர். இந்நிலையில் நேற்று புதிய தலைமுறை இடம் பேசிய புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தில் துணிவோடு செயல்பட்ட இஷா சிங்கை தாம் பாராட்டுவதாகவும், காவல்துறையினர் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தன்னிச்சையாக எப்போதும் பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிலையில், இன்று இஷா சிங் ஐபிஎஸ்ஐ நேரில் அழைத்து பாராட்டிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் புதுச்சேரி மாநில டிஜிபி ஷாலினி உள்ளிட்டோரும் இஷா சிங்கை பாராட்டினர்.
யார் இந்த இஷா சிங்:
30 வயதாகும் இஷா சிங், மும்பையில் ஐபிஎஸ் அதிகாரியில் மகளாகப் பிறந்தார். பெங்களூருவில் சட்டம் படித்த இஷா சிங், வழக்குரைஞராக சாமானிய மக்களுக்காக வாதாடியுள்ளார். 2021 ஆம் ஆண்டு குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சியான இஷா, யூனியன் பிரதேசத்திற்கான கேடரில் பணியில் சேர்ந்து பல்வேறு யூனியன் பிரதேசங்களில் பணியாற்றிய பின்னர் 2024 ஆம் ஆண்டு எஸ்.பி ஆக புதுச்சேரிக்கு பணியில் அமர்ந்தார். யாருக்கும் பயப்படாத குணம், அரசியலமைப்பின்படி சட்டத்தின் படி செயலாற்றும் ஆர்வம் உள்ளிட்டவை இஷா சிங்கை தனித்துவ படுத்தியது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டத்தை எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் நடத்தியதற்காக புதுச்சேரி அரசின் சார்பில் இன்று உள்துறை அமைச்சர் நமசிவாயம் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

