”விஜய் ஒரு நிலா மாதிரி; ஆனால், சூரியன் எப்போதும் இருக்கும்” - திமுகவில் இணைந்த பி.டி செல்வக்குமார்!
தவெக தலைவர் விஜய்க்கு 27 ஆண்டுகளுக்கு மேலாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி செல்வக்குமார். கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த இவர் கலப்பை என்ற இயக்கத்தை தொடங்கி தலைவராகவும் இருந்து வருகிறார். மேலும், இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான புலிப் படத்தின் தயாரிப்பாளரும் ஆவார்.
விஜயிடம் இருந்து தற்போது விலகி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், ”மகாபாரதத்திற்கு மிகப் பெரிய காரணமே சகுனிதான். ராமாயணத்திற்கு மிகப்பெரிய காரணமே கைகேயிதான். அதே போல விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலையானது இருக்கிறது. எனவே அவர் கவனமாக இருக்க வேண்டும். விஜய்யைச் சுற்றி நிறைய சகுனிகள் இருக்கிறார்கள். அவர்களை அவர் அடையாளம் காண வேண்டும். நல்லவர்களை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும்" என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் தான், இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் அவரை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து, அவருடன் சேர்த்து கலப்பை இயக்கத்தை சார்ந்த 100-க்கும் அதிகமானோர் தங்களை திமுகவில் இணைந்திருக்கின்றனர்.
”நன்மைகள் செய்ய அதிகாரம் தேவை”
இதையடுத்து பி.டி செல்வக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது “தென் தமிழகத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், ஒரு தனி இயக்கமாக இருந்து மக்களுக்கு அதிக நன்மைகள் செய்யமுடியாது. அதற்கு அதிகாரமும் நல்ல அரசும் தேவை. எனவே, முதல்வர் மு.க ஸ்டாலின் தலமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவது, என்னை ஈர்த்தது. எனவே இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திமுகவில் இணைந்திருக்கிறேன்.
”சூரியன் என்பது எப்போதும் இருக்கும்..”
விஜய் ஒரு நடிகர். அவர் நல்லது செய்வார் என நினைத்து அவரின் இயக்கத்திற்கு நான் உறுதுணையாக இருந்திருக்கிறேன். விஜய் மக்கள் இயக்கத்தை உருவாக்குவதில் நான் ஒரு தூணாக இருந்தேன். ஆனால், புதிதாக நிறைய பேர் வரும்போது, எங்களைப் போன்றவர்கள் அங்கு பயணிக்க முடியாமல் போனதற்கு காரணமாக இருக்கிறது. அங்கு இருக்கும் தீயவர்களால், நல்லவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். மேலும், ஆரம்பக் கட்டத்திலிருந்து மக்கள் இயக்கத்தில் இருந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை.
விஜய் ஒரு நிலா மாதிரி 15 நாட்கள் பிரகாசமாக இருப்பார். 15 நாட்கள் காணாமல் போய் விடுவார். ஆனால் சூரியன் என்பது எப்போதும் இருக்கும். விஜய் மக்களுக்கு நல்லது செய்வாரா என தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

