கே. பழனிசாமியை முதல்வர் சந்திக்காதது ஏன்? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. அதேசமயம், இத்தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வியடைந்தது. குறிப்பாக, எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெற அக்கட்சி தவறியது. தோல்வி காரணமாக அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது.
குறிப்பாக, தவெகவின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வெட்டவெளிச்சத்துக்கு வந்தது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவையும் மீறி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமி எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்தார்.
இதற்கிடையில் தான், முதல்வராக பொறுப்பேற்ற விஜய் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றிருந்தார். அதிமுகவில் அப்போது, தவெக ஆதரவாக இருந்த எஸ்.பி வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் விஜய பாஸ்கர் உள்ளிட்டோரை சந்தித்திருந்தாலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே. பழனிசாமியை சந்திக்கவில்லை. இது தற்போது வரை பேசுபொருளாகி வருகிறது. அதேசமயம், அதிமுகவில் 4 எம்.எல்.ஏ-கள் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருக்கின்றனர்.
இந்தசூழலில், தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பலரும் விமர்சனங்களை முன்வைத்திருக்கும் நிலையில், தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்திருக்கும் சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் பெ. சண்முகம், அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்த விஜய் கே. பழனிசாமியையும் சந்தித்திருந்தால் இவ்வளவு பிரச்னை வந்திருக்காது என அவர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்துப் பேசியுள்ள அமைச்சர் நிர்மல்குமார், “இதுதொடர்பான கருத்து முன்பிலிருந்தே எழுந்து வந்திருக்கிறது. ஆனால், எங்களுக்கு ஆதரவளித்துள்ள சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். அதிமுக பொதுச்செயலாளரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. ஆனால், அரசியல் சூழலை கருத்தில் கொண்டு ’இப்போதுசந்திப்பது சரியாக இருக்காது’ எனக் கூறினார்கள். எனவே, சந்திக்க முடியாமல் போனது. அதை நாங்கள் கூற வேண்டாம் என நினைத்தோம். இன்று, கூற வேண்டிய கட்டாயம் இருப்பதால் கூறுகிறோம்” என விளக்கமளித்துள்ளார்.

