\
MLAs Continue to Exit; AIADMK Faces Fresh Cracks as TVK Gains Strength
விஜய், எடப்பாடி பழனிசாமிPt web

தொடர்ந்து வெளியேறும் MLA-க்கள்.. மேலும்மேலும் உடையும் அதிமுக.. பலம் பெறும் தவெக!

இன்று காலை சபாநாயகரைச் சந்தித்த அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவும் தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். தவிர, அவரும் தவெகவில் இணைந்தார்
Published on

அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சிலர், தங்களது பதவி விலகல் கடிதங்களை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அளித்துவிட்டு தவெகவில் இணைந்து வருவது பேசுபொருளாகி உள்ளது. இது, தவெகவுக்கு பலத்தைப் பெற்றுத் தரும் நிலையில், அதிமுகவுக்கு மேலும் மேலும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. அதேசமயம், இத்தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வியடைந்தது. குறிப்பாக, எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெற அக்கட்சி தவறியது. தோல்வி காரணமாக அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. அது, தவெகவின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வெட்டவெளிச்சத்துக்கு வந்தது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவையும் மீறி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமி எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்தார். தவிர, அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏ-கள் ராஜினாமா
அதிமுக எம்எல்ஏ-கள் ராஜினாமாPt web

இது, மேலும் கட்சிக்குள் விரிசலை ஆரம்பித்த நிலையில், நேற்று வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் தங்களது பதவி விலகல் கடிதத்தை அளித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் தவெகவில் இணைந்தனர்.

இதற்கிடையே, அவர்கள் பதவி விலகல் கடிதங்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக, அவர்கள் வெற்றிபெற்ற சட்டமன்றத் தொகுதிகள் தற்போது காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இத்தொகுதிகளில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை சபாநாயகரைச் சந்தித்த அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவும் தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். தவிர, அவரும் தவெகவில் இணைந்தார்.

தவெகவில் இணைந்தது குறித்து இசக்கி சுப்பையா, “எனக்கு என்னுடைய தொகுதி மக்கள்தான் முக்கியம். அவர்களுக்காகத்தான் இந்தச் செயல்பாடு. எனக்கென்று சொந்த விருப்பு, வெறுப்பு எதுவும் கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகள் என் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டேன். அதனால் என் தொகுதி மக்களுக்காக இந்த முடிவினை எடுத்து இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, அதிமுக முகங்கள் எல்லாம் தொடர்ந்து அக்கட்சியைவிட்டு வெளியேறி வருவது தவெகவுக்கு கூடுதல் பலத்தைத் தந்துள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், இது நல்லதல்ல என விசிக தலைவர் திருமா விமர்சித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com